சிறீலங்கா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் 24 மணிநேரம் கால அவகாசம் வழங்கியுள்ள சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியமைப்பதற்குரிய அனுமதியை வழங்குவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.
இன்று (15) வியாழக்கிழமை நள்ளிரவுக் குள் பிரதான இரு கட்சிகளுள் ஒரு கட்சி பெரும்பான்மையை உறுதிப்படுத்திய பின்னர் நாளை வெள்ளிக்கிழமை மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா பொதுமக்கள் முன்னணி அபார வெற்றிபெற்றதையடுத்து தெற்கு அரசியலில் குழப்பநிலை உருவாகியுள்ளது. கூட்டரசையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லமுடியாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
தேர்தல் முடிவு வெளியான தினத்திலிருந்து மைத்திரியும், ரணிலும் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்திவருவதாலும், இரகசிய சந்திப்புகளாலும் தெற்கு அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டரசை தக்க வைக்க அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளும் சமரச முயற்சியில் இறங்கியுள்ளன.
கூட்டு அரசிலிருந்து வெளியேறும் முடிவில் உறுதியாக இருக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகினால் கூட்டாட்சி பற்றி பரீசிலிக்கலாமென அறிவித்துள்ளது. ஆனால், தலைமை அமைச்சர் பதவியைத் துறப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது. அதையடுத்து கட்சியின் உயர்மட்டப் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளார். அத்துடன், தனியாட்சி அமைக்கவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இருதரப்பும் இவ்வாறு விட்டுக்கொடுப்பின்றி செயற்படுவதால் மைத்திரிக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கூட்டு அரசிலிருந்து விலகினால் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கத் தயாரென மகிந்த அணியும் அறிவித்துள்ளது.
இந்தப் பின்னணியுடன் அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் நேற்று (14) சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்களைச் சந்தித்த மைத்திரி, நான் நடுநிலையாகவே இருக்க விரும்புகின்றேன். அரசியல் பதற்றமானது நாட்டுக்கு அனைத்து விதத்திலும் பாதகமாக அமைந்துவிடும். நாளை வியாழக்கிழமை (இன்று) நள்ளிரவுக்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சிக்கு ஆட்சியமைக்க அனுமதி வழங்குவேன் என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குரிய முயற்சியில் இருதரப்பும் இறங்கியுள்ளன. தம்முடன் கைகோக்குமாறு மகிந்த அணிக்கு சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு அந்தத் தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலர் மகிந்த அமரவீர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைமையிலான அரசை அமைக்க அரச தலைவரிடம் கோரியுள்ளார். இது தொடர்பில் நேற்று மாலை அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 6 ஆசனங்களையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஆகியன தலா ஓர் ஆசனம் வீதம் கைப்பற்றின.
நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை. (113 ஆசனங்கள்) இதையடுத்தே கூட்டாட்சி அமைக்கப்பட்டது. தற்போது கூட்டரசு குழம்பியுள்ளதால் 106 ஆசனங்களை வைத்துள்ள ஐ.தே.க. இன்னும் 7 ஆசனங்களைத் திரட்டி ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. மைத்திரி பக்கமுள்ள உறுப்பினர்களுடன் இரகசியப் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.
ஆளும்கட்சியில் இணையமாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளதால் ஐ.தே.கவுக்குப் பெரும் தலையிடி ஏற்பட்டுள்ளது. மறுபுறத்தில் 95 ஆசனங்களை வைத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ.தே.க. பக்கமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வலைவிரித்துள்ளது.
இதனால் அரசியல் களத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்துவரும் ஒவ்வொரு நிமிடமும் கொழும்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.