ஐக்கிய தேசிய கட்சியுடனே வேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சியமைக்க இதுவரை எமது கட்சிக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. அரசாங்கம் இது தொடர்பில் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் நாம் சிறந்த தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவிவரும் அரசியல் நிலைவரங்களின் அடிப்படியில் ஐக்கிய தேசியக்கட்சி தனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டனவா என்பது தொடர்பில் அதன் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அழைப்புக்கள் விடுக்கப்படுமாயின் , எமது கட்சியின் மத்திய செயற்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றினை மேற்கொள்ளுமென அவர் மேலும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தல் நடப்பதற்கு முன்னரே இப்படியான முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத் தக்கது.
உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு பின்னடைவுகளைச் சந்தித்துள்ள நிலையில் கூட்டமைப்பின் இம் முயற்சி மக்களிடையே விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.