புங்குடுதீவுப் பகுதியில் சிறீலங்கா கடற்படையினரின் பவள் கவச வாகனம் மோதியதில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறீலங்காக் கடற்படை சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
புங்குடுதீவு மகா வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த 24.01.2018 அன்று சிறீலங்கா கடற்படையின் கவசவாகனம் மேதி ஏற்பட்ட விபத்தில் புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்ற மாணவி உயிரிழந்திருந்தார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பவள் கவசவாகன கடற்படை சாரதி அன்றைய தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் மன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நேற்று (07) எடுத்து கொள்ளப்பட்டது.
குறித்த மாணவியின் மாமனார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார். குறித்த வழக்கில் சாரதியான கடற்படை சிப்பாயும், மாணவியின் மாமனாரும் இணைக்கப்பட்டு உள்ளமையால், அப்பாவி தண்டிக்கப்படக் கூடாது எனும் நோக்கம் மன்றுக்கு உள்ளமையால், அந்த வழக்கில் மாமனாருக்கு பிணை வழங்கப்படும்போது என்ன பிணை நிபந்தனைகள் உள்ளனவோ அதே பிணை நிபந்தனைகளுடன் சாரதியும் பிணையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றார் என நீதிவான் தெரிவித்தார்.
அதனையடுத்து கடற்படை சாரதியும் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார்.
2009 இற்கு பின்னர் போர் ஓய்ந்துள்ள நிலையில் சிறீலங்கா கடற்படையின் 20 முகாங்கள் தீவுப் பகுதியில் உள்ளன. போர் அற்ற சூழலில் சிறீலங்கா கடற்படையினர் இப்பகுதியில் பாரிய வாகனங்களை போர்ச் சூழல் போல் வேகமா வீதிகளில் சென்று வருவதற்கு எதிரா மக்கள் தொடர்ந்து விசனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.