தென்மராட்சிப் பிரதேசத்தில் கடந்த உண்ணிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது என சாவகச்சேரி சுகாதார திணைக்களத்தினர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று தினங்களில் 15க்கு மேற்பட்டோர் உண்ணிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. உண்ணிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட அனைவரும் தற்போது பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் நெல் அறுவடையில் ஈடுபடுவோர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
நெல் அறுவடையின் போது வைக்கோல்களில் காணப்படும் உண்ணிகள் கடிப்பதால் காய்ச்சல் ஏற்படுகின்றது. இரு தினங்களுக்கு மேல் தேக உளைவுடன் காய்ச்சல் காணப்படின் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறும் அறிவித்துள்ளனர்
கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த பெருமழை மற்றும் வெள்ளம் காரணமாக குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களுக்கு நிகராக உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த வருடம் பெருமழை பெய்த போதிலும் பெருவெள்ளம் குறைவாக ஏற்படாததால் உண்ணிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் மிகக்குறை வாகவே காணப்பட்டது.
பிரதேசத்தில் காலபோக நெற்செய்கை அறுவடை ஆரம்பித்த நாள் தொடக்கம் உண்ணிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது எனவும் அறுவடையில் ஈடுபடும் பொதுமக்கள் உண்ணிக் கடியிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் உடைகளை அணிந்து அறுவடையில் ஈடுபடுமாறும் அறிவித்துள்ளனர்.