தமிழை நாம் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்ல வேண்டும். தமிழை வாழும் மொழியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதன் பெருமையை, அருமையை அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துரைக்க வேண்டும்.
தமிழ் மொழியின் அருமை பெருமையை நம் இளையவர்கள் உணர்ந்தால்தான் அந்த மொழியை அவர்கள் பயன்படுத்துவார்கள், தக்கவைத்துக்கொள்வார்கள். வளர்க்கப் பாடுபடுவார்கள். அப்பொழுதுதான் தமிழ் மொழி அடுத்த நிலைக்குச் செல்லும். இதைச்செய்தால் தமிழ் இன்னும் வாழும் மொழியாகவே இருக்கும்.
நாம், நாடு என்றும் மதம் என்றும் சாதி என்றும் பிரதேசம் என்றும் பிரிந்து நில்லாமல் ‘தமிழன்’ என்று ஒன்றுசேர்ந்து நிற்க வேண்டும். நமது தாய்க்கு நிகரான தாய்மொழியைக் காக்கப் பாடுபடவேண்டும் என்றார் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடத்திய கலை இலக்கியப் பண்பாட்டுப் பெருவிழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:
மொழி என்பது ஆன்மா பயணிக்கும் பாதை. ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு தன் பண்பாட்டை எடுத்துச்செல்லும் வழி. தமிழர்களாகிய நம்மைப் பொறுத்தவரை தமிழ் மொழி என்பது வெறும் ‘வழி’ மட்டுமல்ல அதுதான் நமது ‘விழி.’ தமிழ் என்பது வெறுமனே நமது பேச்சு அல்ல அதுதான் நமது மூச்சு.! தமிழ் வாழும் மொழி. இன்று உலகத்தில் ஏறக்குறைய 6000 மொழிகள் உள்ளன.
இவற்றிலே ஆறு மொழிகள்தான் இதுவரை செம்மொழித் தகுதியைக் கொண்ட மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், சமஸ்கிருதம், சீனம், தமிழ் ஆகியவையே அவையாகும்.
இந்தச் செம்மொழிகளிலே சீனமொழி யையும் தமிழ் மொழியையும் தவிர ஏனையவை இறந்துவிட்டன அல்லது உருமாறி விட்டன. இலத்தின் மற்றும் சமஸ்கிருத மொழிகள் இன்று வழக்கொழிந்துவிட்டன.
தமிழ் ஒரு தொன்மையான மொழி மட்டுமல்ல, அது இன்றுவரை தொடர்ந்து வாழுகின்ற மொழி! தமிழ் மொழி காலத்தை வென்று நிற்கின்றது, காலம் கடந்தும் நிற்கின்றது. தமிழின் சிறப்பைச் சிலாகித்துக் கூறும் பல்வேறு அடைமொழிகளுள் ஒன்று ‘கன்னித் தமிழ்’ என்பதாகும்.
தமிழ் மொழியின் இந்நெடிய வாழ்வுக்கு, தமிழ் மொழியின் இளமைக்கு காயகல்பமாய் விளங்குவதற்கு காலத்துக்கு ஏற்றவாறு தமிழ் தன்னைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டு வருவதேயாகும்.
பாரதியார் சில கனவுகள் கண்டார். தமிழ் மொழியைக் குறித்து அவர் கனவு கண்டார். ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ என்பது தமிழ் மொழிகுறித்த பாரதியின் கனவு.
பாரதியின் கனவுகளை நனவாக்கியவர் நம் ஈழம் பெற்றெடுத்த தமிழ் அறிஞர் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார். பாரதியின் வார்த்தைக்கு செயல் வடிவம் கொடுத்தவர் தனிநாயகம் அடிகளார்.
தமிழர்கள் தமக்குள்ளேயே பழம்பெருமை பேசிக்கொண்டிருந்த வேளையில் புலவர்க ளுக்குள்ளும் பண்டிதர்களுக்குள்ளும் தமிழ் மொழி முடங்கிக் கிடந்தநிலையில் தனிநாயக அடிகளார் அதனை உலக அரங்கில் ஏற்றிவைத்தார்!
முதல் முதலில் 1966ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் நகரில் முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை அடிகளார் கூட்டினார். இவருடைய முயற்சி யால்தான் உலகின் பல்வேறு நாடுகளில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
தமிழைப்பற்றி தமிழர் அல்லாதவர்களும் ஆய்வு செய்யும் நிலையை இந்த மாநாடுகள் மூலம் அடிகளார் தோற்றுவித்தார். ‘தமிழ்ப் பண்பாடு’ என்ற பெயரில் ஆங்கில மொழியில் ஒரு முத்திங்கள் ஏட்டை வெளியிட்டார். இதன்மூலம் தமிழ் அறிஞர்களும் தமிழரல்லாத வேற்றுமொழி அறிஞர்களும் தமிழ் மொழி தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளை வெளிக்கொணர வழிகோலினார்.
தமிழின் தூதுவராக அவர் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியின் தொன்மையை, மேன்மையை அதன் செழுமையான இலக்கிய வளத்தை பிறநாட்டவர்களுக்கு எடுத்து விளக்கினார். அதனால்தான் அவரை ‘தமிழ்த்தூது’ என்று தமிழ் உலகம் கொண்டாடுகின்றது. ஆக, அவர் நடத்திய உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் ஆவர்.
நிறுவிய உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அவர் வெளியிட்ட முத்திங்கள் ஏடு அவர் உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிபற்றி வழங்கிய சொற்பொழிவுகள் ஆகிய இவற்றின் மூலம் தமிழின் சிறப்பை சீர்மையை உலகம் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தது. செம்மொழி என்ற அந்தஸ்தை நமது தமிழ் மொழி பெறுவதற்கு தனிநாயகம் அடிகளார் மேற்கொண்ட முயற்சிகள் காத்திரமானவையாகும்.
தமிழனுக்கு அடிக்கடி தன் தாய்மொழியின் மேன்மையை தமிழ்க் கலை இலக்கியங்களின் பெருமையை நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது. அதற்காக இதுபோன்ற தமிழ் விழாக்களை நாம் அடிக்கடி ஒழுங்குபடுத்தவேண்டும். மொழி உணர்வை, இன உணர்வை, பண்பாட்டு உணர்வை இதுபோன்ற விழாக்கள் நமக்கு ஊட்ட வேண்டும்– என்றார்.
Home
ஈழச்செய்திகள் தமிழ் மொழியின் அருமை பெருமையை நம் இளையவர்கள் உணர்ந்தால்தான் அந்த மொழியை அவர்கள் பயன்படுத்துவார்கள்!