ஐ. நா மனிதவுரிமைகள் அவையில் சமர்ப்பிக்கப்படவிருந்த தீர்மானத்தைப் பிற்போடுவதற்கு சர்வதேசம் ஒரு புறத்தில் எத்தனித்துக்கொண்டிருந்து , மறுபுறத்தில் தமிழர்களின் வாக்குளைப் பெற்று ஆட்சிப் பீடமேறிய புதிய சிங்கள அரசு, தமிழர்களுக்கு நீதி கிடைப்பதனைத் தடுத்து அதனைத் தனது முதல் வெற்றிப்பரிசாக சிங்கள மக்களுக்குக் வழங்கக் காத்திருந்தது.
சர்வதேசமோ சிங்களதேசமோ எதிர்பார்த்திருக்காத அதிர்ச்சிப் பரிசாக தமிழர் தரப்பு வடமாகாண சபையில், ‘ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே’ என்னும் பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றி வழங்கியிருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணசபை அரசு, சட்ட நுணுக்கங்களைக் கரைத்துக்குடித்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியை முதல்வராகக் கொண்ட அரசு, சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்வைத்துள்ள தீர்மானத்தை இலகுவில் புறம்தள்ள முடியாத இக்கட்டான நிலைக்குச் சர்வதேசம் தள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணையை நிறைவேற்றியதன் பின்னர், இதன் பிரதிகளைக் கையளிக்கப் பல்வேறு ஐரோப்பிய அரச, அரசசார்பற்ற பிரதிநிதிகளை நாம் சந்தித்தவேளை நேரடியாக இதனை உணரமுடிந்தது. அவர்கள் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள தங்கள் நிகழ்சி நிரலை முன்நகர்த்த முடியாமல் குழம்பிப்போயுள்ளார்கள்! பல்கலைக்கழக மாணவர்களினதும் தாயகமக்களினதும் போராட்டங்களும் இப்பிரேரணைக்கு வலுச்சேர்த்துள்ளன.
ஆயுதப்போராட்டம் மௌனித்ததன் பிற்பாடு, உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவற்கான வலுவான ஆயுதமொன்றினைத் தமிழர்கள் துணிவோடு கையில் எடுத்துள்ளனர். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குப்பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமாக இதனைக் கருதலாம். உலகத் தமிழர்கள் அனைவருமே ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதையும் இது உறுதிப்படுத்தியுள்ளது.
புதிய ஆட்சியில் தலைமை அமைச்சராகி நல்ல மனுசன் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவையும் இந்தத் தீர்மானம் சீற்றம் கொள்ளவைத்தது. ஆடிப்போன மனுசன் தான் எப்போதும் அசல் இனவாதிதான் என்பதை நிருபித்ததோடு மகிந்தபாணியில் தமிழர்களை அச்சுறுத்தவும் தயங்கவில்லை!
அதுமட்டுமன்றி சிங்கள அரசோடு கூடிக்குலாவித் தங்கள் மண்டை வளத்தினால் தமிழர்கு ‘உரிமை’ வாங்கித்தர முயன்று கொண்டிருப்பதாகக் கதைவிட்டுக் கொண்டிருந்த தமிழ்க் கனவான்களின் கனவும் கலைந்து போனது.
ஐ.நா பேரவையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தன் பரிவாரங்களுடன் ஓடோடிச் சென்று வடமாகாண முதலமைச்சரைச் சந்திக்வேண்டிய அளவிற்குத் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது இந்தப் பிரேரணை! ஜெப்ரி அவர்களின் கைகளிலும் பரேரணையின் பிரதியொன்றை முதல்வர் கொடுத்துள்ளார்.
மகிந்த ஆட்சிக் காலத்தில் எமது தாயக உறவுகளுக்கு முற்றுமுழுதாக சனநாயக வெளி மறுக்கப்பட்டிருந்தது. கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்குள் மூச்சுக்கூட விடமுடியாத நிலையில் அடக்குமுறைகளை எதிர்கொண்டிருந்தார்கள். புலம்பெயர் தேசங்களில் போராட்டங்ளை நாம் நடாத்துகின்றபோது அதற்குச் சமாந்தரமாக தாயாகத்தில் போராட்டங்களை நடாத்த முடியாத நிலையில் அவர்கள் தங்கள் மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்தார்கள்.
இந்தச்சூழ்நிலையானது ‘புலம்பெயர் மக்கள் தேவையில்லாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள் இலங்கைத்தீவில் தமிழர்கள் நன்றாகத்தான் வாழ்கின்றார்கள்’ என்ற சிங்கள அரசின் பொய்ப்பரப்புரை சர்வதேச மட்டத்தில் எடுபடவும் துணையானது. ஆனால் இனிவரும் காலங்களில் தாயகம், புலம் தமிழகம் ஏனைய நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் என ஓரே குரலில் எமது உரிமைக்காகக் குரல்கொடுப்போம்.
சர்வதேச கண்காணிப்பின் கீழ் வந்துள்ள புதிய சிங்கள அரசு முன்னைய அரசின் மற்றொரு வடிவமாக இருக்கின்றபோதும் சனநாயகச்சூழல் நாட்டில் நிலவுவதாகப் போலியாகக்காட்டிச் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றுகொண்டிருக்கின்றது. இந்த முயற்சிகள் தோற்றுப் போகின்றபோதோ அல்லது அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலோ நிலைமை பழைய நிலைக்கும் திரும்பும் சாத்தியக்கூறுகள் உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆக இன்று கிடைத்துள்ள குறைந்தபட்ச வாய்ப்புக்களையும் நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
மகிந்த ஆட்சியினை அகற்றுவதற்கு தமிழரின் பிரச்சனையை வைத்து மிரட்டிக்கொண்டிருந்த சர்வதேசத் தரப்புகள் ஆட்சிமாற்றத்தின் பின்னர் புதிய அரசினை வலுப்படுத்தும் வேலைகளில் கரிசனையோடு செயற்படுகின்றன. ஐ.நா மனிதவுரிமைகள் அவையில் தமிழர் பிரச்சனை குறித்த அறிக்கை பிற்போடப்பட்டதும் அதிலோரு அங்கமே! சிறிலங்கா அரசு எவ்வளவு தூரம் சர்வதேச நாடுகளுடன் இணங்கிப் போகின்றதோ அந்த அளவிற்கு எமது பிரச்சனையும் சர்வதேச அரங்கில் இருந்து காணாமல் போய்விடும்.
காலம் அறிந்து வராற்றுத்தேவை உணர்ந்து எதிர்காலச் சந்ததியின் பழிச்சொல்லுக்கு ஆளாகாமல,; வடமாகாணசபையில் இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இத்தீர்மானம் உலகத்தமிழர்களின் இதயங்களில் குமுறிக்கொண்டிருந்த உணர்வுகளின் வெளிப்பாடாகவே நாம் கருதுகின்றோம். இது வடமாகாணசபையின் தீர்மானமாக மட்டும் நின்றுவிடாமல் அனைத்துத் தமிழ் அரசியல் தரப்பினரதும் ஓரே தீர்மானமாக மாற்றம் பெறவேண்டும். இத்தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு பல்வேறு முயற்சிகள் விரைவில் நடக்கலாம்.
அவற்றுக்கு எவரும் துணைபோய்விடக்கூடாது என்றும் வேண்டுகின்றோம். நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்து தொலைந்துவிட்டுப் போகட்டும்.ஆனால் தமிழரின் நலன் என்று வருகின்றபோது அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஓரே குரலில் உறுதியான செயற்ப்பாட்டுத் தளத்தில் நாம் சேர்ந்து இயங்க வேண்டும்.
எதிர்வரும் 16 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறும் அன்போடு வேண்டி நிற்கின்றோம். தீர்மானத்தை செயலுருப்பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
ஊடகப்பிரிவு
பிரான்சு தமிழீழ மக்கள்பேரவை
பிரான்சு தமிழீழ மக்கள்பேரவை