ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட சுதந்திரம் தமிழ் மக்களிடமிருந்து பெரும்பான்மையினத்தவர்களால் பறிக்கப்பட்டு விட்டது. தமிழர்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாட முடியாது. இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்..
வடக்கு முதலமைச்சரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது-,
பெரும்பான்மையினர் என்ற விதத்தில் சர்வ அரச அதிகாரங்களையும் ஆங்கிலேயரிடம் இருந்து பெற்றிருந்தார்கள். அவற்றை வைத்துக் கொண்டு ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் சிங்கள இனத்தவர்களுக்கு எதிராகப் பாரபட்சமாக அவர்கள் நடந்து கொண்டார்கள் என்ற பொய்யான காரணத்தைக் காட்டி சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.
இது உண்மைக் கூற்றல்ல. எப்பொழுதும் தகைமைக்கு முதலிடம் கொடுத்தவர்கள் ஆங்கிலேயர். அவர்கள் காலத்தில் திறந்த போட்டிப் பரீட்சைகளில் முதன்மையாகத் தேறிய தமிழர்கள் பல அரச வேலைகளிலும் மற்றும் சேவைகளிலும் கடமையாற்றி வந்தார்கள்.
தமிழ் மக்களை எல்லா விதங்களிலும் வலுவிழக்கச் செய்ய அவர்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ‘சிங்களம் மட்டும்’ சட்டம் இயற்றப்பட்ட போது தான் தமிழர்கள் அளவான சூடு கொண்ட வறுவல் பாத்திரத்தில் இருந்து அனலெறியும் அடுப்பில் விழுந்துள்ளமையை உணர்ந்தார்கள்.
வடக்கு – கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தமிழர்கள் வாழ்ந்து வந்த அவர்களின் வீடுகளிலிருந்து அடித்து விரட்ட கலவரங்களும் கலகங்களும் அப்போதைய அரசுகளாலேயே முடுக்கி விடப்பட்டன. இவற்றிலிருந்து ஒரு உண்மை புலப்பட்டது. தமிழர்கள் தமது சுதந்திரத்தை சிங்கள மக்களிடம் பறிகொடுத்தமை வெளிப்பட்டது. இன்றும் நிலமை மாறவில்லை.
வெள்ளையரிடம் இருந்து நாம் பெற்ற சுதந்திரம் இன்று பொருளற்றதாகப் போய்விட்டது. ஏனெனில் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த நாங்கள் இன்று பெரும்பான்மை இனத்தவரின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் உட்பட்டுவிட்டோம்.
ஒரு முறையான கூட்டாட்சி அரசமைப்பின் கீழ் உண்மையான அதிகாப் பகிர்வு பெற்றாலேயே அன்றி நாம் எமது பறி கொடுக்கப்பட்ட உரித்துக்களை மீண்டும் பெற முடியாது – என்று குறிப்பிட்டுள்ளார்.