உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், ரணில் விக்கிரமசிங்கா சிறிலங்காவின் தலைமை அமைச்சர் பதவியில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெளியேற்றும் என்று அந்தக் கட்சியின் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் (02) நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது;
தற்போதைய சூழ்நிலையில், பெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல்கள் முடிந்த பின்னர், ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக புதிய தலைமை அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டால், இந்த நகர்வு சாத்தியமாகும். ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி கிடைத்தால், இந்த நோக்கம் சாத்தியப்படாது.
வாக்காளர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களித்தால் தான், புதிய தலைமை அமைச்சரை அரச தலைவரால் நியமிக்க முடியும்.
உள்ளூராட்சித் தேர்தல் 10ஆம் திகதி முடிந்த பின்னர், இந்த கூட்டு அரசில் இணைந்திருப்பதா இல்லையா என்பதை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மையக் குழு முடிவு செய்யும்.
அரச தலைவர் மைத்திரிபால நிச்சயமாக, பொருளாதாரத்தை தனது கட்டுப்பாட்டில் தேர்தலின் பின்னர் எடுத்துக் கொள்வார்.அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் குடியுரிமை யைப் பறிப்பதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது.
மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கும் வரையில் மகிந்த ராஜபக்சவின் விடயத்தில் அவருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார். அரச தலைவர் ஆணைக்குழு விசாரணையின் அடிப்படையில் சட்டமா அதிபரால் சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் சுதந்திரக் கட்சி அந்த விடயத்தில் தலையிடாது – என்றார். மகிந்த ராஜபக்சவின் குடியுரிமை பறிப்பு விடயத்தில் அவரை மைத்திரிபால சிறிசேன பாதுகாத்து வருகின்றார் என்று சிறீலங்கா தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க சில தினங்களுக்கு முன்னர் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Home
ஈழச்செய்திகள் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர், ரணில் பதவியில் இருந்து வெளியேற்றப் படுவார் ?