பெரும்பான்மை அரசுகள் எந்தக் காலத்திலும் எமது உரித்துக்களை முழுமையாகத் தரப்போவதில்லை என்பதே எனது கணிப்பு. தருவதாகக் கூறுவதெல்லாம் பாசாங்கு. தருவதாக இருந்தால் எம்முடைய வாக்கின் நிமித்தம் பதவிக்கு வந்த இன்றைய அரசு பதவிக்கு வந்த உடனேயே எமது பிரச்சினைகளைத் தீர்த்திருக்கும். தீர்க்க மனமில்லை. தருவோம் தருவோம் என்பார்கள் ஆனால் தரமாட்டார்கள்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.வடக்கு முதலமைச்சால் வாரந்தோறும் அனுப்பிவைக்கப்படும் வாரத்துக்கொரு கேள்வி பதில் அறிக்கையில் வடக்கு மக்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்கும் உதவிகளை நீங்கள் புறக்கணிப்பதாக கூறப்படுகிறதே? அதற்கு உங்கள் விளக்கம் என்ன என்ற கேள்விக்கான பதிலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பணம் சம்பாதிக்கலாம் என்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் எமது மக்களும் அவர்களின் வாரிசுகளுமே காலக்கிரமத்தில் பாதிக்கப்படப் போகின்றவர்கள் என்பதை நாம் உணர்ந்து செயலாற்ற வேண்டும். அரசு வருமானம் ஈட்டுதலை மட்டுமே ஒரேயொரு குறிக்கோளாக வைத்து சில தருணங்களில் செயல்த்திட்டங்களை வடமாகாணத்துக்கு வகுக்கின்றார்கள். அது தவறு.
எமது சுற்றுச் சூழல், சீதோஷ்ண நிலை, கலை கலாசாரப் பின்னணி, எமது வாழ்க்கை முறை, எமது எதிர்பார்ப்புக்கள் போன்ற பலதையும் கணக்கில் எடுத்தே இவற்றை வகுக்க வேண்டும். இதற்காகத்தான் சட்டம் பலவிதமான அறிக்கைகளைக் கோரி நிற்கின்றது. சுற்றுச் சுழல் அறிக்கை, கடற்கரைப் பாதுகாப்பு திணைக்கள அறிக்கை என்ற பலதையும் சட்டம் எதிர்பார்க்கின்றது. எம்மவர் இவற்றையெல்லாம் புறக்கணித்துத் தமக்குத் தனித்துவமாகக் கிடைக்க இருக்கும் நன்மைகளை முன்வைத்தே தீர்மானங்களை எடுத்து வந்துள்ளார்கள் போலத் தெரிகின்றது.
பதவி இருந்தால் எதையும் செய்யலாம் என்ற தவறான அபிப்பிராயத்தை நாங்கள் இனியேனும் நீக்கிக் கொள்ள வேண்டும். பின்பற்றி நடக்கவே சட்டம் என்றொன்று உண்டு. செலவைக் குறைக்க சில ஒப்பந்தக்காரர்கள் குறைபாட்டுடன் பள்ளிக் கூடக் கட்டடங்களைக் கட்டி எழுப்புகின்றார்கள். சில வருடங்களில் அவை பழுதடைந்து வீழ்ந்து சில நேரங்களில் குழந்தைகளின் உயிர்களையும் பறித்து விடுகின்றன.
நாம் வருங்காலத்தை யோசிக்காது உடனே கிடைக்கும் நன்மைகளை மட்டும் பார்த்தோமானால் அது பல சிக்கல்களை எமக்கு உண்டாக்கும். அரச உதவிகளை நாங்கள் இன்னொரு கண்கொண்டும் நோக்க வேண்டியுள்ளது. பெரும்பான்மை அரசு ஏதோ ஒரு நிறுவனத்தின் பணத்தை எமக்குச் செலவழிக்கவே முன்வரும். உதாரணத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணத்தைத் தருவதாகக் கூறுவார்கள். அவர்களுக்கு அந்தப் பணம் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கின்றது என்று கூறி தாம் எமக்காகக் கடன்பட்டுள்ளதாகக் கூறுவார்கள்.
ஆனால் எமது உரிமைகள் எவற்றையுந்தர மறுப்பார்கள். ஆகவே தரவருபவர்களின் தானத்தின் தாற்பரியங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எமது உரித்துக்களைத் தராது விடுத்து எமக்கு பொருளாதார உதவிகள் பலதையும் அளித்து எம்மைத் தம் கட்டுப்பாட்டுக்குள் நிரந்தரமாக வைத்திருப்பதை எமது மக்கள் விரும்புகின்றார்களா என்பதை முதலில் நீங்கள் ஆராய்ந்து பாருங்கள், என்னைப் பொறுத்த வரையில் எமது உரிமைகளே முதன்மையுடையது. மற்றவையாவும் பின் செல்பவை.
உதவிகள் பெற்றுக்கொண்டால் நாம் அவர்களுக்கு கடமைப்பட்டுவிடுகின்றோம். அதன் பின் சிங்களக் குடியேற்றம், படையினர் தொடர் வசிப்பு, மீன்பிடியில் தென்னவர் ஆக்கிரமிப்பு என்று பலதையும் நிரந்தரமாக்கி விடுகின்றார்கள். நாம் பேசா மடந்தைகளாக கைகட்டி வாய்புதைத்து நிற்கின்றோம். எனினும் உதவிகள் எமக்குத் தேவை. கட்டாயந் தேவை.
மனிதாபிமானத்துடன் தரப்படும் உதவிகளை நாம் பெற்றுவருகின்றோம். மேற்கூறிய எனது கருத்துக்களே நான் மத்தியின் உதவிகளைப் புறக்கணிக்கின்றேன் என்று கூற வைத்திருக்க வேண்டும். நான் புறக்கணிக்கவில்லை. நாம் பங்குதாரர்களாக செயற்றிட்டங்களில் பங்காற்ற வேண்டும் என்ற எமது உரிமை சார்ந்த கருத்துக்களை வலியுறுத்தியிருக்கின்றேன்.
அவ்வளவுதான். நாம்முதலில் எமது உரித்துக்களை உரியவாறு பெற்றுக் கொள்ளாது விட்டால் காலக்கிரமத்தில், உங்களுக்கு நாம் அது தந்துவிட்டோம் இது தந்துவிட்டோம் என்று கூறி மேலும் எதுவும் அரசியல் ரீதியாகத் தரமுடியாது என்று கைவிரித்து விடுவார்கள். அரசுகளோ, தனியார்களோ கொண்டுவரும் சகல செயற்றிட்டங்களையும் உன்னிப்பாகக் கவனித்தே நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
Home
ஈழச்செய்திகள் எமது பிரச்சினைகளைத் தீர்க்க மனமில்லை. தருவோம் தருவோம் என்பார்கள் ஆனால் தரமாட்டார்கள் !