1983 யூலை வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது 27 தமிழ் கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நிறைவு செய்யப்பட்டு, அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் போது வெளியிடப்பட்ட சாட்சிகளின் பிரகாரம் சிறையில் இருந்து கலவரத்தின் இடை நடுவே முச்சக்கர வண்டியில் தப்பியோடும்போது பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் 8 பேரும், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை மீது தாக்குதல் நடத்தும் போது பதில் தாக்குதலில் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும், கலகம் அடக்கப்பட்ட பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டுபேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு அறிவித்துள்ளது.
1983 இல்தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு யூலை வன்முறை நிகழ்வுகளின் போது இடம்பெற்ற உச்சக்கட்ட நிகழ்வைக் குறிக்கும். இதன் போது மொத்தம் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.. இப்படுகொலை நிகழ்வில் எவரும் இதுவரையில் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை.
இப்படுகொலை நிகழ்வானது இரண்டு வௌ;வேறு நாட்களில் நடைபெற்றது. இரண்டும் கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான வெலிக்கடையில் இடம்பெற்றன. முதலாவது படுகொலை யூலை 25, 1983 இல் 35 தமிழ்க் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் கத்தி மற்றும் வாள்களினாலும் பொல்லுகளினாலும் குத்திக் கொல்லப்பட்டனர். இரண்டாவது நிகழ்வு இரண்டு நாட்களின் பின்னர் யூலை 28ம் திகதி இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்..
இப்படுகொலை நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூலத்தின்படி சிறைச்சாலை அதிகாரிகளே அறைக்கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்கு கொடுத்ததாக தெரிவித்திருந்தனர்.