இலங்கை அரசியலில் இன்று அதிகம் பேசப்படும் தமிழ் அரசியல் தலைவராக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளார். அதனால் வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராகவும் அவரே இருப்பார்.
இவ்வாறு வடக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
விக்னேஸ்வரனுக்கு ஒருபுறம் அவரது அரசியல் எதிராளிகள் அவரை அரசியல் அனுபவம் இல்லாதவர் என்றும், நிர்வாகம் தெரியாதவர் என்றும், அபிவிருத்திக்கு எதிரானவர் என்றும், வடக்கு மாகாணத்துக்கு வருகின்ற நிதியைச் சரிவரப் பயன்படுத்தத் தெரியாமல் திருப்பி அனுப்புகின்றார் என்றும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ஆனால், இன்னொருபுறம் வடக்கின் வெகுமக்களோ முதலமைச்சரைக் கொண்டாடுகிறார்கள். முதலமைச்சர் எவருக்கும் அடிபணியாமல், எதற்கும் சோரம்போககாமல், இனத்தின் குரலாக ஒலிப்பதாலேயே இவ்வளவு விமர்சனங்களையும் அவர் எதிர்கொள்கிறார் என்பதை அவர்கள் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.
உள்ளுராட்சிச் சபைகள் முற்றுமுழுதாகப் பிரதேசத்தின் அபிவிருத்தியுடன் தொடர்பானவை. இதன்காரணமாக உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போது அபிவிருத்திபற்றி மட்டும் பேசினால் போதும், அரசியல் பற்றிப் பேசவேண்டாம் என்று சில தரப்பினர் கூறிவருகிறார்கள். இனப் பிரச்சினை காரணமாகவே எமது பிரதேசங்களின் அபிவிருத்தி பாதிக்கப்பட்டது.
எனவே எமது பிரதேசங்க ளில் நிலையான அபிவிருத்தி என்பது தமிழ்மக்களுக்கான நிலையான, முழுமையானஅரசியல் தீர்விலேயே தங்கியிருக்கிறது. இதனால், அந்தத் தீர்வை எட்டும்வரை அபிவிருத்திப் பற்றிப் பேசும்போது அதன் பின்னால் உள்ளஅரசியல் பற்றியும் நாம் உரத்துப் பேச வேண்டிய கட்டாயத்திலேயே உள்ளோம் என்றார் ஐங்கரநேசன் .