வளர்தமிழ்ப் பொதுத்தேர்வு அதிதிறன், தமிழ்த்திறன் பரிசளிப்பு வளர்தமிழ் 10 11 12 நிறைவு செய்தவர்களுக்கான மதிப்பளிப்பு
‘தமிழே எங்கள் உயிர்’ என்று தமிழை உயிர் மூச்சாகக் கொண்டு தமிழ்ப் பணியினை ஆற்றும் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை ஐக்கியராச்சியக்கிளையின் 2017ம் ஆண்டுக்குரிய அனைத்துலகத் தமிழ்மொழிப்பொதுத் தேர்வில் அதிதிறன் (90 – 100 மதிப்பெண்கள்), தமிழ்த்திறன் – பேச்சு, திருக்குறள், கட்டுரை, கவிதைப் போட்டிகளில் பரிசுகiளைப் பெற்ற மாணவர்களுக்குரிய பரிசளிப்பும் மதிப்பளிப்பும், 4 வது பரிசளிப்புப் பெருவிழாவாக, 22.01.2018 ஞாயிறு காலை 10 மணியளவில் கரோ நகர பைரன் மண்டபத்தில் மிகச்சிறப்பாக இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவர்,பெற்றோர்,ஆசிரியர் முன்னிலையில் இரண்டு பகுதிகளாகத் தொடர்ந்து நடைபெற்றது.
14 நாடுகளில் 60,000 வரையான மாணவர்கள் பின்பற்றும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் வளர்தமிழ் பாடநூல் பாடத்திட்டத்தினை ஐக்கியராச்சியத்தில் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை ஐக்கியராச்சியக்கிளையுடன் சேர்ந்து இயங்கும் 94 பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன. இப்பள்ளிகளிலிருந்து 600 வரையான மாணவர்கள் அதிதிறனோடு சேரந்த பரிசுகளைப் பெற்றிருந்தனர்.
தாயக மண்மீட்புப் பணியில் இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்கு அகவணக்கம் செலுத்தியதுடன் நிகழ்வுகள் தொடங்கியது. கடந்த ஆண்டைப் போலவே நிகழ்வுகளை பெரியோரது வழிகாட்டலில் இளம் மாணவர்கள் மிகவும் சிறப்பாகத் தொகுத்து வழங்கியிருந்தனர்.
தமிழர் பண்பாட்டின் அடையாளமாக மங்கல விளக்கினை, தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் மேலாளார் திருமதி நகுலா அரியரத்தினம் அவருடன் திரு அரியரத்தினம் அவர்களும், தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் ஐக்கியராச்சியக்கிளையின் மேலாளார்; திரு முருகுப்பிள்ளை ஞானவேல் அவர்களும் ‘நற்றமிழ்ப்பணியாளர்’ என தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் ஐக்கியராச்சியக் கிளையினால் மதிப்பளிக்கப்பட்ட திருமதி தங்கேஸ்வரி கங்காதரனும் ஆசிரியர் – ஊடகவியலாளர் – ஆய்வாளர் பற்றிமாகரன்; அவர்களும் ஏற்றிவைத்தனர்.
தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் ஐக்கியராச்சியக்கிளையின் மேலாளார் திரு முருகுப்பிள்ளை ஞானவேல் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அதிகரித்து வரும் மாணவர் தொகையையினால் பரிசளிப்பு நிகழ்வுகள் இரண்டு பகுதிகளாக, தொடர்ந்து மண்டபம் நிறைந்த பெருவிழாவாக நடைபெற்றது. விழாவிற்கு மெருகூட்டும் வகையில் தமிழ்த்திறன் போட்டிகளில் பேச்சு, திருக்குறள் போட்டிகளில் 1ஆம் இடத்தைப் பெற்ற மாணவர்களது பேச்சும், திருக்குறளும் இடம்பெற்றன.
விழாவிற்கு அன்றைய பனிப்பொழிவையும் பொருட்படுத்தாது ஸ்கொட்லண்ட், வேல்ஸ், மன்செஸ்டர் போன்ற தூர இடங்களிலிருந்தும் ஐக்கியராச்சியத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாணவர் பெற்றோருடன் மிகவும் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்திருந்தனர்.
தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை தொடங்கிய காலம் முதல் இன்றுவரை இடையறாது பொறுப்பாக இருந்து பணியாற்றி வரும் திரு திருமதி அரியரத்தினம் அவர்கள் முதன்மை விருந்தினர்களாக கலந்து இப் பெருவிழாவினைச் சிறப்பித்திருந்தனர். அவர்களது தொடர் பணியினை மதிப்பளித்து அவர்களுக்கு நினைவுப்பரிசிலும் வழங்கப்பட்டது. அத்துடன் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் மேலாளர் திருமதி நகுலா அரியரட்ணம் அவர்களின் சிறப்புரையும் இடம் பெற்றது.
இம்முறை மாணவர்களின் பரிசில்களை தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை ஐக்கியராச்சியக்கிளையுடன் சேர்ந்து இயங்கும் பள்ளிகளின் நிர்வாகிகளும்; வழங்கிச் சிறப்பித்திருந்தனர். இவ்விழாவின் முதன்மை நிகழ்வாக 2017இல் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் நடாத்தப்பட்ட அனைத்துலகத் தமிழ்மொழி;ப்பொதுத்தேர்வில் வளர்தமிழ் 12 நிறைவு செய்த மாணவர்களுக்கான மதிப்பளிப்பு இடம் பெற்றது. 18 மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
அத்துடன் வளர்தமிழ் 10, 11 நிறைவு செய்த மாணவர்களுக்கும் அவர்களை ஊக்கப்படுத்துவற்காக பரிசுக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன. விழாவில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கியராச்சியக்கிளையின் செயலாளர் திருமதி உமா காந்தியவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டது.
மாணவர், பெற்றோர், ஆசிரியர் என்ற முக்கோணப் பங்களிப்புடன் எம் செம்மொழியாம் தமிழ்மொழிக்கல்வியை ஆர்வமுடன் மொழியை அழியவிடாது காக்க வேண்டும், எதிர்காலத் தலைமுறைக்கு தமிழைக் கொண்டு செல்ல வேண்டிய தேவையையும் இப் பரிசளிப்புப் பெருவிழாவின் மாணவர் நிகழ்வுகள் காட்டி நின்றன. நிறைவில்; தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை ஐக்கியராச்சியக்கிளையுடன் பயணிக்கும் அனைவருக்கும் நன்றிகூறி அனைவரது ஒத்துழைப்புடனும்; மேலும் தமிழ்மொழிக் கல்வியை வளப்படுத்துவோம் என்ற உறுதிமொழியுடன் விழா இனிதே நிறைவடைந்தது.