பைலட்டுகளின் வேலை நிறுத்தம் காரணமாக லூப்தான்சா விமான நிறுவனத்தின் 1350 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன.
ஜெர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனத்தின் பைலட்டுகள், ஓய்வூதிய பயன்கள் தொடர்பான கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிற்சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக இன்று ஐரோப்பிய நாடுகளுக்குள் இயக்கப்படும் விமானங்களை இயக்க மறுத்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். நாளை நீண்ட தூர விமானங்களை இயக்குவதில்லை என்று அறிவித்துள்ளனர். நாளை நள்ளிரவுடன் போராட்டம் நிறைவடைகிறது.
பைலட்டுகளின் போராட்டத்தால், லூப்தான்சாவில் மொத்தம் உள்ள 2800 விமானங்களில் 1350 விமானங்கள் நாளை நள்ளிரவு வரை ரத்து செய்யப்பட்டன. இதனால், சுமார் 1.5 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.