இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ‘‘எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வோம்’’ என்று பேசியதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இன்று காலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட போவதாக இளைஞர் காங்கிரசார் அறிவித்து இருந்தனர். இதையொட்டி தூதரகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
முற்றுகை போராட்டத்துக்காக திரண்ட இளைஞர் காங்கிரசாரை தூதரகத்துக்கு அருகே செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அந்த பகுதியில் நின்றபடி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் இலங்கை பிரதமரை கண்டித்தும், பிரதமர் மோடி இலங்கைக்கு செல்லக்கூடாது என்றும் கோஷங்கள் எழுப்பினார்கள். சிலர் ரணில் விக்ரமசிங்க படத்தை ஆவேசத்துடன் செருப்பால் அடித்தனர்.
போராட்டத்துக்கு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆபிரகாம் தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.எம்.குமார், சிரஞ்சீவி, ஹசன்அலி, எம்.எம்.டி.ஏ. கோபி, பாண்டியன், மதுசூதனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.