முன்னைய அரசாங்கத்தின குற்றங்களை மறைத்து குற்றவாளிகளை காப்பாற்றும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்கின்றது. கடந்த கால தவறுகளை இவர்களும் செய்யக்கூடாது என தெரிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு கட்டுப் படவில்லை. ஆனால் தேசிய அரசுக்கு நாம் எதிரிகளில்லை எனவும் குறிப்பிட்டது.
மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது
கடந்த ஆட்சியில் பல தவறுகள் இடம்பெற்றதுடன் அனைத்து துறைகளிலும் ஊழலும் கொள்ளையும் இடம்பெற்றன. அதனை தாங்கிக்கொள்ள முடியாத சூழ்நிலையிலேயே மக்களாக ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியிருந்தனர். மத்திய வங்கி உள்ளிட்ட நாட்டின் மூலதனத்தினை தீர்மானிக்கும் சகல விடயங்களிலும் முன்னைய குடும்ப அரசியலின் ஆதிக்கம் காணப்பட்டது. அதனை உடனடியாக ஆதாரமெதுவுமின்றி தண்டிக்க முடியாது என்பது எமக்குத் தெரியும். ஆனால் நிரூபிக்க முடிந்த பல குற்றச்சாட்டுக்கள் இருந்தும் அவை தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காதது ஏன் என்பதும் விசாரணைகள் எடுக்கப்படாததும் ஏன் என மக்கள் கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டு விட்டது.
முன்னைய அரசாங்கத்தின் குற்றங்களை மறைத்து குற்றவாளிகளை பாதுகாப்பதில் இந்த அரசாங்கம் துணை நிற்கின்றது. ஆரம்பமே இவ்வாறு குற்றச் சாட்டுக்களுடன் அரசாங்கம் பயணிக்குமாயின் எதிர்வரும் காலங்களில் நிலைமைகள் என்னவாகும்? எனவே இவ்விடயத்தில் பாரிய குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நபர்களுக்கு எதிராக அரசாங்கம் காலம் கடத்தி நடவடிக்கை எடுப்பதும் குற்றவாளிகளின் குற்றங்களை மூடி மறைக்க முயற்சிப்பதையும் மக்கள் விடுதலை முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது.
மேலும் நாம் ஐக்கிய தேசியக்கட்சிக்கு கட்டுப்பட்டுள்ளதாக எழுப்பும் கேள்விகள் அனைத்துமே தவறானவை. ஜே.வி.பி யாருக்கும் அடி பணியும் கட்சியோ யாரை யும் அடக்கும் கட்சியோ அல்ல. எமக்கு மக்களின் பலம் உள்ளது. அவர்களுக்காகவே குரல் எழுப்புகின்றோம். இன்று நாம் தேசிய அரசின் அனைத்து செயற்பாடுகளையும் விமர்சிக்க முடியும் என்றார்.
ஆனால் அது அர்த்தமற்றது. அதேபோல் தேசிய அரசின் பிளவுகளை சரி செய்ய அதை விட சிறந்த மார்க்கம் வேறொன்றும் இல்லை. எனவே நாமும் தேசிய அரசின் எல்லா செயற்பாடுகளுடன் இணைந்து செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.