கிளிநொச்சி சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு களத்தில்!

0
203
யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றுகொண்டிருந்த  சிறைச்சாலை பேரூந்தில் பயணித்த சிறைக் காவலர்களால் கிளிநொச்சி சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
நேற்றைய தினம்  (23) மாலை கிளிநொச்சி  கரடிப்போக்கு சந்தியில்  சிறைக்காவலர்கள் பயணித்த  சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில்  துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் சிறு காயங்களுக்குள்ளாகியிருந்தான்.
குறித்த விபத்து துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவனின் தவறு என தெரிவித்து சிறு  காயங்களுடன்  உணவகம் ஒன்றினுள் நின்ற சிறுவனை சிறைக்காவலர்கள் மனிதாபிமானம் இன்றி சரமாரியாக தாக்கியமை புகைப்படம் மற்றும்  ஒளிப்பதிவு மூலம் ஊடகங்களில் வெளிவந்திருந்தன. தாக்குதலுக்குள்ளான சிறுவன்  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசைக்கு பின் இன்று(24) மதியம் வீடு திரும்பிய நிலையில்..
யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு  இன்று(24)  பிற்பகல்  மூன்று மணியளவில் கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கருகில் உள்ள  சிறுவனின் இல்லத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய ஆணையாளர் க. கணகராஜ் தலைமையிலான குழுவினர்  சிறுவனிடம் வாக்கு மூலத்தை பதிவு செய்யததோடு, தாம்  காவல்துறையினர், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் சம்மந்த பட்ட சிறைசாலை அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் அறிக்கைகளை பெற்று உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என க. கணகராஜ் தெரிவித்தார்.
அத்தோடு கிளிநொச்சி வைத்தியசாலையில்  தாக்கப்பட்ட சிறுவனிடம் விசாரணைகளை  மேற்கொண்ட காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு எந்த தகவல்களும் வழங்க வேண்டாம்  எனவும் ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்டால் தங்களுடன் தொடர்பு கொள்ளாமல் எதனையும் கூற வேண்டாம் எனவும் தெரிவித்ததாக குறித்த சிறுவன் தெரிவித்துள்ளான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here