”இந்தியாவை பொறுத்தவரை அந்த நாடு இலங்கையின் வடக்கு, கிழக்கை மாத்திரம் பார்க்காமல் முழு இலங்கையையும் பார்க்க வேண்டும். மேலும் சீனாவுடன் எவ்வாறான கொள்கையுடன் இலங்கை செயற்படவேண்டும் என்று இந்தியா கூற முடியாது” என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணங்களை பார்க்கும் போது அது இலங்கையில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எனினும் இந்த விடயங்களில் இந்தியா இலங்கையின் அனைத்து பகுதிகளையும் கருத்திற்கொள்ள வேண்டும் என்று ரணவக்க குறிப்பிட்டார்.
த இந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இந்தியா, இலங்கையின் தமிழர்கள் மத்தியில் இந்திய, இலங்கை உடன்படிக்கையின்படி பாதுகாவலனாக செயற்பட்டுள்ளது. அத்துடன் விடுதலைப்புலிகளுக்கு அது ஒருகாலத்தில் ஆதரவையும் வழங்கியது. இது சிங்கள மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது. எனவே இந்தியாவின் எண்ணங்களில் மாற்றம் வேண்டும்.
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி இல்லை. இலங்கைக்கும் கலாசார பண்புகள் என்ற பல்வேறு விடயங்கள் உள்ளன. இந்நிலையில் இலங்கையில் இசை, சினிமா, கிரிக்கெட் என்று மட்டுமல்லாமல் இந்து மத மற்றும் பௌத்த மதங்களின் பொதுவான தோற்றப்பாடுகள் விடயத்தில் இந்தியா தமது முனைப்பை காட்ட வேண்டும்.
இலங்கையில் தமிழ் மக்கள் பதவியில் இருக்கின்ற அரசாங்கங்களுடன் ஒத்துழைத்து செயற்படவேண்டும். தமது பிரச்சினைகளை இந்தியாவிடம் கூறிக்கொண்டிருக்காமல் அரசாங்கத்துடன் செயற்பட
வேண்டும்.
மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் ஏற்பட்ட நம்பிக்கையை விடுத்து தற்போது இலங்கை, இந்திய உறவை வலுப்படுத்த சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சீனா அடுத்த பாரிய பொருளாதார வல்லரசாக மாறப்போகின்றது என்று எம் அனைவருக்கும் தெரியும். சீனாவுடன் எவ்வாறான கொள்கையுடன் இலங்கை செயற்படவேண்டும் என்று இந்தியா கூற முடியாது. ஆனால் துரதிஷ்டவமாக சீனாவினதும் அமெரிக்காவினதும் பனிப்போரில் இலங்கை சிக்கியுள்ளது.