ஈழத்து பொப்பிசைச் சக்கரவர்த்தி என அழைக்கப்படும் பாடகர் ஏ.ஈ. மனோகரன் தனது 73வது வயதில் காலமானார்.
சென்னை கந்தன்சாவடியில் வசித்து வந்த ஏ.ஈ. மனோகரன் நேற்று (22) இரவு 7.20 மணியளவில் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.
அண்மைய நாட்களாக அவரது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை மருத்துவமனையில் சிகிற்சைபெற்றுவந்த மனோகரன் உடல் உபாதைகளுக்கு உட்பட்டிருந்த நிலையிலேயே இன்று சாவடைந்துள்ளார்.
இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளதாக அவரது மனைவி திரேசா மனோகரன் அறிவித்துள்ளார்.
1965 இல் பாசநிலா படத்தில்,(ஈழத்துப்படம்) 1975ல் புதியகாற்று திரைப்படத்தில், 1978 இல் வாடைக்காற்று திரைப்படத்தில் நடித்திருந்தார்.
“சுராங்கனி சுராங்கனி ” என்ற பாடல், ஈழத்தில் மாத்திரமல்ல, தமிழகம் உள்ளிட்ட தமிழ் மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் புகழ்பெற்றது. அத்துடன் அந்தப்பாடலை ஹிந்தி, மலையாளம், பேரர்த்துக்கல் உள்ளிட்ட பல மொழிகளிலும் பாடி உலக கலைஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.
இவரது பொப்பிசை பாடல்கள் இன்றும் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கின்றன.
‘வாடைக்காற்’ ‘பாசநிலா’ ‘ புதிய காற்று’ ஆகிய பல ஈழத்து தமிழ் திரைப் படங்களிலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசனுடன் ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்திலும் இணைந்து நடித்து பெருமை சேர்த்தவர்.
இவர் இறுதியாக மாதவனுடன் ஜேஜே படத்தில் இணைந்து நடித்திருந்தார்.
அத்திப்பூக்கள், திருமதி செல்வம்,அஞ்சலி போன்ற இந்திய தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருந்தார்.
இவரின் இறுதிக் கிரியைகள் பொதுமக்கள், கலைஞர்கள் உள்ளிட பலதுறையினரின் அஞ்சலிக்குப் பின்னர், நாளை (24) ஆம் திகதி புதன்கிழமை சென்னையில் தகனம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.