ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை இந்திய மத்திய அரசுக்கு 3 மாதங்கள் கால அவகாசம் !

0
316


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவார்களா மாட்டார்களா என்பதை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து 2014ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய 4 பேரையும் சேர்த்து மொத்தம் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது.
இந்த வழக்கின் புலன் விசாரணையை சி.பி.ஐ. மேற்கொண்ட காரணத்தால், மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தும் முன் மத்திய அரசுடன் கலந்தாலோசிப்பது அவசியமாகும். எனவே மத்திய அரசின் கருத்தை கேட்டு 2014 பிப்ரவரி 19ம் தேதியே, தமிழக அரசு கடிதம் அனுப்பியது. மத்திய அரசின் கருத்தை 3 தினங்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டிருந்தது.
7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பான தனது கருத்தை தெரிவிப்பதற்கு பதிலாக, தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அதே ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரத்தில் விடை காண வேண்டிய சட்டரீதியான 7 கேள்விகளை முன்வைத்தது.
அதன் பிறகு 2015ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி இந்த கேள்விகளுக்கு விடையளித்த 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, அதன் அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு பற்றி விசாரிக்குமாறு உத்தரவிட்டது. இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தன்னை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது. 7 பேரை விடுதலை செய்ய முடிவெடுத்து மத்திய அரசின் கருத்தை கேட்டு 2016 ஆம் ஆண்டு இரண்டாம் கடிதம் எழுதியிருந்தது. ஆனால் மத்திய அரசு பதில் தரவில்லை.
இந்த நிலையில், தமிழக அரசின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மத்திய அரசுக்கு இன்று உச்சநீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, 7 பேரையும் விடுதலை செய்ய விருப்பமா என்பது பற்றி மத்திய அரசு முடிவெடுத்து 3 மாதத்தில் தெரிவிக்க வேண்டும் என கெடு விதித்துள்ளது உச்சநீதிமன்றம். எனவே, ஏதாவது ஒரு முடிவை அறிவித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய மத்திய அரசு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here