முதலமைச்சர் விக்னேசுவரன் அவர்களே இலட்சுமண ரேகை கடக்கும் தருணமிது!

0
865

கௌரவ வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேசுவரன் அவர்களே! நீங்களாகவே உங்களைச் சுற்றி வரைந்திருக்கும் இலட்சுமண ரேகையை கடந்து தமிழ் மக்களின் எதிர்கால இருப்பினை உறுதிசெய்வதற்கு தீர்க்கமான முடிவெடுக்கும் தருணமிது. இதனை தவறவிடின் சமபந்தன்-சுமந்திரன் குழுவின் தமிழினத் துரோகத்தை விஞ்சியதான வரலாற்றுப் பழியை நீங்கள் ஏற்கும் நிலை உருவாகும் என்பதனையும் இத்தருணத்தில் ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
உண்மை கசப்பானதாகத்தான் இருக்கும். கசப்பானதாக இருக்கின்றதென்பதற்காக உண்மையை உரைக்காது மௌனித்திருக்க முடியாது. அவ்வாறு நாமும் மௌனித்திருந்தோமேயானால் வரலாறு என்றென்றும் மன்னிக்காது.
உங்கள் அரசியல் பிரவேசத்திற்கு வழியேற்படுத்திக் கொடுத்தார்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காக, சம்பந்தன்-சுமந்திரன் கூட்டணி செய்யும் தமிழினத் துரோகத்தை பொறுத்துக் கொள்வதற்கோ, தமிழரசுக் கட்சியின் எதேச்சதிகாரப் போக்கினை கண்டுகொள்ளாதிருக்கவோ முடியாது. அவ்வாறான மனநிலையில் தொடர்ந்தும் இருப்பீர்களேயானால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகிவிடும்.
சம்பந்தன்-சுமந்திரன் கூட்டணியோ, தமிழரசுக் கட்சியோ உங்களை தமிழ் அரசியல் களத்தில் அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனால் இன்று நீங்கள் ஏற்றிருக்கும் உயர் மதிப்பு நிலையானது விடுதலை வேணவா சுமந்து நிற்கும் எமது மக்களின் தார்மீக ஆதரவுத் தளத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பதே மறுக்க முடியாத பேருண்மையாகும்.
நம்பி நம்பி ஏமாந்து போகும் தமிழரின் தலைவிதி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் காலத்தில் திருத்தி எழுதப்பட்டிருந்தது. இருந்தும் பிராந்திய, உலக வல்லாதிக்க சூழமைவிற்கேற்றவாறு தமிழர்களின் பாதுகாப்பான இருப்பினை உறுதிசெய்யும் நோக்கில் ஆயுதங்களை மௌனிக்கும் நிலை ஏற்பட்டிருந்தது.
இதுதான் தருணம் என்பதாக மனிதநேயம் போதிக்கும் பிராந்திய, உலக நாடுகள் தமிழர்களின் பேரழிவை விழிதிறந்த உறக்க நிலையில் நின்று வேடிக்கை பார்த்தன. அது போதாதென்று நடந்த இனப்படுகொலைக்கு காரணமானவர்களை இந்த கணம்வரை பாதுகாக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றமை அந்தந்த நாடுகள் கடைப்பிடித்து வரும் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் நேர் விரோதமான நிலைப்பாடாகும்.
நீதி நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய சர்வதேச சமூகம் நல்லிணக்கம், நல்லாட்சி, அபிவிருத்தி என்ற மதிமயக்க நிலையில் நின்று பாதிக்கப்பட்ட எமது அபிலாசைகளை தியாகம் செய்யுமாறு நிர்ப்பந்தித்து வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களது கண்மூடித்தனமான சரணாகதி அரசியல் அணுகுமுறையே இதற்கெல்லாம் முழுக்க முழுக்க காரணமாக அமைந்துள்ளது.
நீதிக்கான செயற்பாடுகளை காரணம் காட்டி காலத்தை இழுத்தடித்தார்கள். காலத்தை கடத்திய பின்னர், இனிமேல் நடந்தவற்றை பேசி என்ன ஆகப்போகின்றது தருவதை வாங்கிக்கொண்டு வாழப்பழகிக்கொள்ளுங்கள் என்ற ரீதியில் தரம்தாழ்ந்து போதிக்கின்றார்கள். இன்னும் கொஞ்சக் காலம் இப்படியே கடந்தோமேயானால் தருவதை சத்தமில்லாது வாங்கிக்கொள்ளுங்கள். இல்லையென்றால் அதுவும் கிடைக்காது என்று மிரட்டாத குறையாக உபதேசிப்பார்கள்.
இவ்வாறான இக்கட்டு நிலையில் தமிழர்களைக் கொண்டுவந்து நிறுத்தியது போதாதென்று தமிழர்களின் மானத்தை மறைக்க இருக்கும் கோவணத்தையும் உருவியெடுக்கும் விதத்தில் ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை ஏற்றுள்ளனர் த.தே.கூட்டமைப்பின் தலைவர்கள்.
தமிழ் மக்களின் நிலைப்பாட்டிற்கு நேர் விரோதமான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் விரோதப் போக்கிற்கு மத்தியில் ஒரேயொரு ஆறுதலான இருப்பது உங்களது நிலைப்பாடு மாத்திரமே. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தியதான உங்கள் நிலைப்பாடே தாயக அரசியல் வெளியை ஆக்கபூர்வமான நிலையில் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இருந்த போதிலும் தமிழ் மக்களின் நிரந்தர இருப்பை உறுதிசெய்ய வேண்டுமாயின் நீங்கள் தீர்க்கமான முடிவொன்றை கால தாமதமின்றி விரைந்து எடுத்தேயாக வேண்டும். கழுவிற நீரில் நழுவிற மீனா இருந்தது போதும். உங்கள் தயக்கத்தை எம்மால் உணரமுடிகின்றது. சம்பந்தன் சொல்வது போன்று பேரதிசயம் நடக்க இருந்து அதை நீங்கள் கெடுத்துவிட்டதான பழிச்சொல்லை ஏற்காதிருப்பதற்காகவே பட்டும் படாமலும் இருந்து வருகின்றீர்கள் என்பதையும் நாம் நன்கு அறிவோம்.
சம்பந்தன்-சுமந்திரன் கூட்டணியின் பழிச்சொல்லிற்கு பயந்தோ, தயங்கியோ இவ்வாறு இருந்தீர்களேயானால் வரலாற்றுப் பழியை சுமக்க நேரிடும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அறுதியிட்டு நிறுதட்சனமாக உரைக்கின்ற ஒரே காரணத்திற்காகவே தமிழ் மக்கள் உங்களை ஆதரித்து நிற்கின்றார்கள் என்பதை நீங்கள் உணர்ந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
தமிழ் மக்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் செயல்பட வேண்டிய நிலையில் பௌத்த சிங்கள பேரினவாத அரசு மற்றும் பிராந்திய உலக வல்லரசுகளின் நலன்களுக்கு ஒத்திசைவான போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் குறித்தான வாதப்பிரதிவாதங்கள் இன்று அர்த்தமற்றதொன்றாகிவிட்டது.
மக்கள் மாற்றம் குறித்து சிந்திக்கத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் நம்பிக்கைக்குரிய தலைவராக விளங்கிவரும் நீங்கள் துணிந்து தெளிவான முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. உங்களால் எதுவும் கெட்டுவிடக் கூடாதென்று நீங்கள் காட்டும் தயக்கம் உங்களை நம்பி நிற்கும் தமிழர்களை மீளமுடியாத பேராபத்தில் கொண்டுபோய் தள்ளிவிடும் என்பதை நினைவில் நிறுத்தி நல்லதொரு முடிவை விரைந்து எடுத்திட வேண்டும்.
சம்பந்தன்-சுமந்திரன்-மாவை-சிறிதரன்-அடைக்கலநாதன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களாக உள்ளவர்களையும் ஏற்று அங்கீகரித்து தமிழ் மக்களின் அரசியல் தலைமையென்ற அங்கீகாரத்தை வழங்கியது அவர்கள் மீதான தனிப்பட்ட அபிமானத்தினாலோ அல்லது அவர்களது அரசியல் ஆளுமையின்பாற்பட்டோ இல்லை. அவர்கள் முன்னிறுத்திவந்த தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாட்டின் அடித்தளத்தில் தமிழர்களின் தேசிய அபிலாசைகளை வென்றெடுக்க பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர்களை மக்கள் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.
ஆனால் மேற்குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழர்களின் அபிலாசைகளுக்கு வேட்டு வைக்கும் விதமாக செயற்பட்டு வருவதன் காரணமாகவே எந்த மக்களால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டார்களோ அந்த மக்களாலேயே நிராகரிக்கப்படும் அவலத்தை சந்தித்து நிற்கின்றார்கள். உங்களுக்கு முன்னர் நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட இவர்களுக்கான அங்கீகாரமும் நிராகரிப்பும் தமிழ் மக்களின் அபிலாசைகள் சார்ந்தே தீர்மானிக்கப்பட்டு வருகின்றது என்பது வரலாறு கூறிநிற்கும் பேருண்மையாகும்.
தாயக அரசியல் வெளியில் மாற்று தலைமை ஒன்றிற்கான தேவை உணரப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்ட நிலையில் நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தல் அதற்கான சூழமைவை ஏற்படுத்தியிருந்தது. அருமையான இச்சந்தர்ப்பம் முளையிலேயே கருகிப்போனது மட்டுமல்ல பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக இந்திய வல்லாதிக்கத்தின் கண்ணசைவில் செயற்படும் கூட்டிணைவு ஒன்றின் உருவாக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது.
நடந்த இவை அனைத்திற்கும் உங்கள் கனத்த மௌனமே வழிசமைத்துள்ளது என்பது கசப்பான உண்மையாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக தமிழ் மக்கள் பேரவையை தமிழ் மக்கள் ஆதரித்து நிற்கும் நிலையில் அதில் அங்கம்வகிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் உருவாக்க முயற்சித்திருந்த மாற்றுத் தலைமை என்பது கானல்நீராகிப் போனது உங்களால் தான் என்பதை முதலில் நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
உங்கள் அர்த்தமற்ற தயக்கம், குழப்பம் விடுத்து தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தியதான நிலையில் திடமான முடிவொன்றை எடுத்திருந்தால் தாயக அரசியல் தடுமாற்றம் கண்டிருக்காது என்பதை ஆணித்தரமாக கூறமுடியும்.
இந்த பின்னணியில் தாயக அரசியல் வெளி மீண்டும் தமிழினத் துரோகிகளின் கைகளுக்குள் சென்றுவிடும் பேராபத்து சூழ்ந்துள்ளது. இவ்வாறான குழப்பத்திற்குள் மக்கள் வாக்களிக்கச் செல்லாது அமைதியாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் சரியான முடிவெடுக்காது மௌனமாக இருப்பது தவறுக்கு துணைபோவதற்கு நிகரானது என்பதை நன்கு அறிந்த நீங்கள் தொடர்ந்தும் மௌனமாக இருப்பது பெரும் வரலாற்றுத் தவறாகிவிடும்.
நொடிந்துகொண்டு போகும் தமிழ் மக்கள் பேரவையைப் பலப்படுத்தி பேரவையின் கொள்கையுடன் இணைந்து செயற்படும் கட்சியை நோக்கி உங்கள் சுட்டுவிரலைக் காட்டுங்கள். ஒரு பலம் வாய்ந்த மக்கள் சக்தி கொண்ட தமிழ்த் தலைவர் ஒருவராலேயே இன்றைய இடைவெளியை நிரப்ப முடியும். அந்த முனைப்பும் சக்தியும் உங்களிடம் இருப்பதாக மக்கள் நம்புகின்றார்கள்.
நீங்களாகவே உங்களைச் சுற்றி போட்டிருக்கும் இலட்சுமண ரேகையை கடக்கும் தருணமிது முதல்வர் அவர்களே. அன்று இராமாயணத்தில் இலட்சுமண ரேகையை சீதை கடந்ததால் விபரீதம் ஏற்பட்டது. இன்று நீங்கள் உங்களைச் சுற்றிப் போட்டிருக்கும் இலட்சுமண ரேகையை கடக்காவிட்டால் பேரனர்த்தம் ஏற்பட்டுவிடும். கௌரவ வட மாகாண முதல்வர் க.வி.விக்னேசுவரன் அவர்களே முடிவு உங்கள் கையில்.
மதிப்பிற்குரிய க.வி. விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் இதுவரை சாதித்த விடயங்கள் என்று பார்த்தால் மாகாணசனையில் இனவழிப்புத்தீர்மானம் நிறைவேற்றியது, காணிகளை ஓர் அளவேனும் விடுவித்தமை, தமழர்களின் எதிர்கால இருப்பை உறுதிப்படுத்தப் பாடுபடுவது, சிங்களக் குடியேற்றங்கள் ஓர் அளவேனும் மட்டுப்படுத்தப்பட்டமை, சிங்கள-சர்வதேச கூட்டுச்சதியை பலவீனப்படுத்தி பொறுப்புக்கூறலை உயிர்ப்போடு வைத்திருத்தல், சர்வதேசத்தின் மிரட்டல்களுக்குப் பணியாமை, சிறிலங்காவின் இடைக்கால அறிக்கையில் உள்ள ஓட்டைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துகின்றமை, வடக்குக் கிழக்கு இணைக்கப்பட வேண்டும் எனத் தொடர்ச்சியாக அழுத்தும் கொடுத்தல் போன்ற தமிழ்த் தேசியத்தின் இருப்பைத் தக்கவைக்கும் நோக்கில் செயற்பட்டு வரும் முதலமைச்சர் ஐயா அவர்கள் பகிரங்கமாக ஒருசில முடிவுகளை எடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது என்பதைச் சுட்டிக்காட்டவும் அவரை மேலும் ஊக்கப்படுத்தவுமே இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
ஸ்ரிவன் புஸ்பராஜா.க
நன்றி : ஈழதேசம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here