ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன தொடர்பாக சிறீலங்கா வழங்கிய வாக்குறுதி செயலற்ற நிலையிலேயே உள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் பன்னாட்டுச் சாசனத்துக்கு இணங்க தயாரிக்கப்பட்ட சட்டம் திகதியிடப் படாமல் உள்ளமை ஏற்புடையதல்ல.
உலக நாடுகள் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் உள்ளதாவது-,
ஆட்சி மாற்றத்தின் பின்னர் 2017ஆம் ஆண்டு வரை ஊடகங்களுக்கும் மற்றும் சிவில் சமூகங்களுக்கும் பொதுவாக செயற்படுவதற்கான கதவுகள் திறந்துள்ளன. ஆனால் 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை வழங்கிய பொறுப்பு கூறல் மற்றும் அரசியல் நல்லிணக்கம் பற்றிய வாக்குறுதி செயலற்ற நிலையிலேயே உள்ளது.
சிறீலங்கா அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடும் அரச தலைவரின் வாக்குறுதி இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக பன்னாட்டுச் சாசனத்துக்கு இணங்க தயாரிக்கப்பட்ட சட்டம் திகதியிடப்படாமல் உள்ளது.
மத சிறுபான்மையினர் பாதுகாப்பின்மை எனும் அச்சத்தில் உள்ளனர். 31 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை பௌத்த தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. காலியிலும் வவுனியாவிலும் முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகத்துக்கும் இடையே வன்முறை மூண்டது. முஸ்லிம்களின் வீடுகளும் வியாபார நிறுவனங்களும் சேதமாக்கப்பட்டன.
சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பதை மூத்த அமைச்சர்கள் எதிர்க்கின்றனர். அரச தலைவரும், தலைமை அமைச்சரும் கூட அவ்வாறே தெரிவிக்கின்றனர். 2015ஆம் ஆண்டு தீர்மானத்தின் படி நான்கு தூண்களில் ஒன்றாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் அமைகிறது. அரசு இது தொடர்பாக சட்டம் இயற்றினாலும் 2017ஆம் ஆண்டு செப்ரெம்பர் வரை இது செயலற்ற நிலையில் காணப்படுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோருககான அலுவலகத்துக்குரிய ஆணையாளர்கள் இது வரை நியமிக்கபடவில்லை. மனித உரிமைகளைப் பாதுகாப்போம் என்று சிறீலங்கா அரசு வழங்கிய வாக்குறுதி செயல்வடிவம் பெறாமல் உள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது .