முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் மீட்க்கப்பட்ட ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளை அழிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைத்தீவு நந்திக்கடல் மற்றும் நாயாறு பகுதிகளில் அண்மைய நாட்களாக சட்டவிரோத வலைகள் மூலம் மீன்பிடி தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினால் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நந்திக்கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது சுமார் ரூபா 5 இலட்சம் ரூபா பெறுமதியான கூட்டுவலைகள், முக்கூட்டுவலைகள், தங்கூசி வலைகள் என்பன மீட்க்கப்பட்டது.
இது தொடர்பில் வழக்குப்பதிவு செய்த மாவட்ட மீன்பிடிப் பரிசோதகர், குறித்த சான்றுப்பொருட்கள் தொடர்பான வழக்கை நேற்று (18) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில், நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த சான்றுப்பொருட்களை அழிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.