அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தப்படுத்தப்படுவதாகவும் இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளதாவது; டிசம்பர் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கத்தின் தேர்தல் கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களைக் கலந்துகொள்ளச் செய்யும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
இந்தக் கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டுமெனவும் இல்லையேல் மகாபொல புலமைப் பரிசில் நிறுத்தப்படுமெனவும் அப்படி கூட்டத்திற்கு வந்தால் மூன்று தவணைக்குக் கொடுக்க வேண்டிய கொடுப்பனவுகளை ஒரே தடவையால் தருவதாகவும் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கூட்டத்திற்கு வரும்போது வெள்ளை உடையில் வரவேண்டுமெனவும் அதன்போது தொலைபேசிகளை எடுத்துவருவதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக பலவந்தமாக மாணவர்களைக் கூட்டத்திற்கு அழைக்கும் முயற்சிகளை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.