பொங்கிவிடு பொங்கலைப் பொங்கிவிடு – தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்புக் கவிதை!

0
547

https://youtu.be/Xyoonq6pGm8

தளதளத்துப் பொலிவுகூடி
தன்மேனி அழகு சூடி
பொன்மஞ்சள் நிறம் காண
மண் பார்த்து முகம் நாண
கதிர் முற்றித் தலை சாய
புதிராகிப் புன்னகைப்பாள்
வயல் வாழும் நெல் மகளே.
தை வந்து பூத்திடவே
தமிழ் வாசம் பரவிடுமே
கையெடுத்துச் சிரமேற்றி
கதிரவனைப் போற்றிடுமே
வயலோடு சாய்ந்தாடும்
கதிர்மகளைத் தானணுகி – தம்
கையாலே புதிரெடுத்து
கவனமாகக் கொண்டுவந்து
வாசல் நிலையினிலே
வாஞ்சையோடு கட்டிவிட்டு
வரவேற்பர் நம்மவர்
நல்லெழிலாள் தைமகளை
வல்லவராம் சூரியரை.
புதுநெல்லு அரிசியாக்கி
புதுப்பானை தன்னில்த் தேக்கி
பாசிப்பயறு சேர்த்து
பக்குவமாய் நீரூற்றி
அதிகாலைப் புத்தாண்டில்
அடுப்பேற்றிப் பொங்கல் வைப்பார் அப்பா.
நுரைதள்ளும் பசும் பாலை
நிறையும்வரை அதிலூற்றி
சர்க்கரையும் முந்திரியும்
வேர்க்கடலை தானுமிட்டு
பொங்கிடவே பொங்கிடுவோம் .
நாற்சார் கோலமிட்டு
நல்வடிவாய்க் கரும்பு கட்டி
தேங்காய்க் கும்பம் வைத்து
தென்னையோலைத் தோரணமும்
மாவிலைகள் சேர்ந்தாட
பாவாடை அணிந்த எந்தன்
பட்டுமனம் துள்ளியதே
பட்டாசு கொளுத்தி ஆடும்
தம்பி தங்கையரின்
பரவசமோ மிஞ்சியதே
.
நெற்றி நிறை குங்குமமும்
நீர் வழியும் கொண்டையுமாய் அம்மா
வாழையிலை தானிட்டு
வடிவாகப் படையல் செய்வார்
பால் பழம் வெற்றிலை பாக்கு
வாவென்று ஆதவனைத் தானழைக்க
காலைக்கதிர் வந்து இறங்கும்
கனிவான விருந்துண்டு கிறங்கும்.
தேவாராப் பண்ணிசைத்து
தெய்வத்தைப் போற்றிப் பாடி – பெற்ற
தெய்வங்கள் பதம் பணிந்து
திருநிறை ஆசி பெற்று – அன்புச்
செல்வங்கள் பொங்கிடவே
நெகிழ்ந்த நாட்கள்
எங்கு போயிற்று?
சூரியனே நீயும் வருகிறாய்
சுடர்தந்து வாழ்த்த நினைக்கிறாய்
வரவேற்கும் மனங்களிங்கே
வடுசுமந்த ரணங்களாக
எமது எமது என எண்ணியபடியே
விதை விதைத்த வயல்கள் இப்போ
வரண்டு தரிசுகளாய்
வாடுவதைப் பாராயோ?
பொங்குது மனங்கள் இங்கே
புழுங்குது தமிழர் வாழ்வு
மங்களத் தமிழ் மரபை – நீ
மறுபடியும் மிளிரச்செய் – ஒளி
தங்கும் விடியலுக்காய்
உயிர்பொங்கிப் படையலிட்ட
உன்னத வீரர்களின்
எண்ணப் பொங்கலை நீ
ஏற்றுக்கொள் ஒளிமகனே .
சிட்டுக் குருவிகளாய் நாம்
சிரித்து மகிழ்ந்த அந்த
சிலிர்க்கும் நாட்களை
எமக்கே தந்துவிடு
பொங்கிடு சுடாரோனே – பகை
பொசுக்கிச் சாம்பலாக்கு
பொங்கிடு கதிரோனே – மனப்
புண்களை ஆற்றிவிடு – கோபம்
பொங்கிப் பொங்கி வழிய
பொறுமை காக்கும் எமக்குள்ளே – வீரப்
பொங்கலைப் பொங்கிவிடு.
தைப்பொங்கல் இதுவல்ல – ஈழ
விதைப்பொங்கல் இதுவென்று
இருள் கிழித்துப் பொங்கிவிடு – தமிழர்
குருதி படிந்த தாயகத்தின்
குறைகளைந்து பொங்கலிடு
மாற்றம் ஒன்று தான் மாறாததா – நாம் கொண்ட
மண்பற்றும் ஒருபோதும்
மாறாதது என்பதைக்காண்
தை பிறக்கும் இந்நாளில் – ஒரு
வழிபிறக்கப் பொங்கிவிடு
தமிழர் நாம் ஒன்று பட்டு – தமிழ்
ஈழம் வெல்லப் பொங்கிவிடு
பொங்கிவிடு பகலவனே
பொங்கலை நீ பொங்கிவிடு.
-கலைமகள்-
15.01.18

(இருப்பு) 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here