யாழ்.குடாநாட்டில் தைப்பொங்கல் பண்டிகை களைகட்ட ஆரம்பித்துள்ளது. தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையை அண்டியுள்ள பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மண்பானைகளின் வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.
மண்பானைகளில் சிறிய பானையொன்று 150 ரூபாவாகவும், அதற்கு அடுத்துள்ள தரத்திலான பானைகள் 500 ரூபா, 550 ரூபா, 600 ரூபா ஆகிய பல்வேறு விலைகளிலும் விற்பனையாகின்றன. கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகளவிலான மண்பானைகள் விற்பனையாகுமென வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
யாழ்.குடாநாட்டில் தற்போதைய காலகட்டத்திலும் மட்பாண்டத் தொழிலை நம்பிப் பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தைப்பொங்கலை முன்னிட்டு மண்பானைகள் வியாபாரமும், புரட்டாதி மாதச் சனிக்கிழமைகளில் எள்ளெண்ணைச் சட்டி வியாபாரமும் பருவ கால வியாபாரமாக இடம்பெற்று வருகிறது. தற்போது மட்பாண்ட உற்பத்திகளின் பாவனை குறைந்துள்ள போதும் இவ்வாறான சீசன் வியாபாரங்கள் தமக்குக் கைகொடுப்பதாக மட்பாண்ட உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நவீன காலத்தில் பலரும் நவீன அடுப்புக்களில் பொங்கல் பொங்கினாலும் மண் பானைகளில் பொங்கல் பொங்குவதே மனித உடல் ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கும் என கடந்த 20 வருடங்களுக்கும் மேலாகத் தைப்பொங்கலை முன்னிட்டு மண்பானை வியாபாரம் மேற்கொண்டு வரும் மூத்தபெண் வியாபாரியான முனுசாமி வள்ளியம்மை தெரிவித்தார்.