தலைமுடிக்கு பல வர்ணங்களைப் பூசி நீதிமன்றை அவமதிக்கும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றத்துக்கு நபர் ஒருவருக்கு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம்.
ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (10)புதன்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக நீதிமன்றுக்கு வந்த சந்தேகநபரொருவருக்கே நீதிவான் ஏ.எம்.எம் றியாழ் இந்த்த் தண்டனையை விதித்தார்.
ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணை நடைபெறும் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரொருவர் தலைமுடிக்கு பல வர்ணங்களைப் பூசி , வித்தியாசமான முறையில் தலைமுடி அலங்கரித்து நீதிமன்றுக்கு ஒவ்வாத வகையில் ஆடை அணிந்து வந்துள்ளார்.
அந்த நபரின் வழக்கு திறந்தமன்றில் கூப்பிடப்பட்டது. சந்தேகநபர் கூண்டில் ஏறி நிற்கும் போதும் அசாதாரணமாகச் செயற்பட்டார்.
அதனை அவதானித்த மன்று, சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதியுமாறு நீதிமன்ற பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சந்தேகநபருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் மீதான விசாரணையை அடுத்து நீதிமன்றை அவமதித்த குற்றத்துக்காக அந்த நபருக்கு மூன்று மாத கடூழிய சிறைத்தண்டனையை விதித்து நீதிவான் தீர்ப்பளித்தார்.