அமெரிக்காவில் 10 மாத குழந்தை மற்றும் அவரின் பாட்டியை கொலை செய்த ஆந்திராவைச் சேர்ந்த வாலிபருக்கு வருகிற பிப்ரவரி 23-ம் தேதி மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்தவர் ரகுநந்தன் யந்தமுரி(29). அவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். 2012-ம் ஆண்டு பெனிசில்வேனியா மாநிலத்திற்கு சென்ற அவர் அப்பர் மெரியன் டவுன்ஷிப் என்ற பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எடுத்து தங்கினார். அப்போது அதே குடியிருப்பில் தங்கியிருந்த ஒரு தெலுங்கு குடும்பத்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
அந்த குடும்பத்தில் இருந்த வெங்கட வென்னாவும் அவரது மனைவியும் வேலை பார்த்ததால் அவர்களின் 10 மாத குழந்தையான சான்வியை அவரது பாட்டி சத்யாவதி (61) கவனித்துக் கொண்டார். இந்நிலையில், பணத்திற்காக அந்த 10 மாத குழந்தையை கடத்த ரகு முடிவெடுத்தார்.
அதன்படி வென்னாவின் வீட்டிற்கு சென்ற அவரை குழந்தையை கடத்தவிடாமல் பாட்டி சத்யாவதி தடுத்துள்ளார். இதையடுத்து ரகு அவரை கொலை செய்தார். பின்னர் குழந்தை அழுவது யாருக்கும் கேட்காமல் இருக்க அதன் வாயில் துணியை திணித்து ஒரு பெட்டிக்குள் வைத்தார். மேலும் வீட்டில் இருந்த நகைகளையும் அந்த பெட்டிக்குள் வைத்து எடுத்துச் சென்றார். பின்னர் குழந்தையை கொலை செய்த அவர் உடலை குடியிருப்பின் உடற்பயிற்சி நிலையத்தில் இருந்த லாக்கரில் போட்டுவிட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரகுவை கைது செய்தனர். இந்த வழக்கில் ரகுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். ஆனால் அவரது மனு கடந்த ஏப்ரல் மாதம் நிராகரிகப்பட்டது.
இந்நிலையில், ரகுநந்தனுக்கு மரணதனடனை நிறைவெற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 23-ம் தேதி விஷ ஊசி போட்டு அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்ற அரசு முடிவெடுத்துள்ளது. அவ்வாறு தண்டனை நிறைவேற்றப்படும் நிலையில், அமெரிக்காவில் மரணதண்டனை நிறைவேற்றப்படும் முதல் இந்திய ரகு ஆவார்.