சுவிசில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பணிமனைகள்!

0
225

தமிழீழத்திற்கான இலட்சிய கடமைகளை நமது மக்களின் ஒன்றிணைந்த செயற்பாடுகளின் ஊடாக முன்னெடுப்பதற்கும், புலம்பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவும், சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கான சமூக பணிகளை மேற்கொள்ளவும், தமிழ் இளையோர்கள் மத்தியில் தாயகம் சார்ந்த தேடலை உருவாக்கி இனஉணர்வை பேணவும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பணிமனைகள் அனைத்துலகப் பெண்கள் நாளான 08.03.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ன் மாநிலத்தில் Zieglerstrasse 30, 3007 Bern எனும் முகவரியில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனை, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அரசியல் பிரிவு பணிமனை மற்றும் சுவிஸ் தமிழ் காவலர் பணிமனை என மூன்று அலகுகளாக ஒன்றிணைந்த இந்த பணிமனைத் திறப்பு விழாவானது விழாச் சுடரேற்ற்றலுடன், நாடா கத்தரிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பணிமனைகள் திறப்புவிழாவில் பொதுச்சுடரேற்றலுடன், மாவீரர்களுக்கும், மாமனிதர் திரு.கெங்காதரன் அவர்களுக்குமான ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்து அகவணக்கத்துடன் மலர்வணக்கமும் செலுத்தப்பட்டு உறுதியுரையும் எடுக்கப்பட்டது.

பணிமனை நிறைந்த சுவிஸ்வாழ் தமிழின உணர்வாளர்களுடன், செயற்பாட்டாளர்களும் தமது கடமையறிந்து உரிமையுடன் கலந்து கொண்ட இவ் நிகழ்வில் பணிமனைகள் சார்ந்த விளக்கங்களுடன், சிறப்பு கருத்துரைகளும் இடம்பெற்றதோடு தமிழர்களின் தாரக மந்திரத்துடன் பணிமனை திறப்புவிழா எழுச்சியுடன் நிறைவுபெற்றது.

புலம்பெயர் தமிழர்களின் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் விடுதலைச்சுடர் பயணமானது 10.03.15 பிற்பகல் 19.00 மணிக்கு சுவிஸ் செங்காலன் வந்தடைந்து, தொடர்ச்சியாக சுவிஸ்சின் பிரதான நகரங்களூடாக ஐ.நா சபை முன்றலை சென்றடையவுள்ளது. காலத்தின் தேவை கருதி 16.03.2015 திங்கட்கிழமை பிற்பகல் 14.00 -18.00 வரை ஐ.நா சபை முன்றல் முருகதாசன் திடலில் மீண்டுமொரு தடவை எமது அகிம்சைப்போரை எடுத்துரைத்து, தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைவரும் அணிதிரள்வோம் வாரீர் என சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உரிமையன்போடு இத்தருணத்தில் வேண்டி நிற்கின்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

s 2 s 3 s 4 - Copy s 9 - Copys 5 s 6 s 8 - Copy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here