சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளி ஜனாதிபதியாகவோ, பிரதமராகவே எதிர்காலத்தில் பதவி வகிக்கக்கூடிய சாத்தியங்கள் உண்டு என லசந்தவின் சகோதரர் லால் விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.
லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. லசந்தவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வில் லால் விக்ரமதுங்கவின் விசேட செய்தியொன்று, மகள் மினேல் விக்ரமதுங்கவினால் வாசிக்கப்பட்டது.
அந்த செய்தி பின்வருமாறு…
லசந்த விக்ரமதுங்க மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஒன்பது ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் நீதி நிலைநாட்டப்படவில்லை.
லசந்த மட்டும் கொலை செய்யப்படவில்லை, ஏனைய ஊடகவியலாளர்களும் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், இந்த அடக்குமுறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருகின்றது.
உயர்ந்த ஆட்சி தொடர்பில் மக்களின் கரிசனை குறைவடைந்துள்ளது. தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை கையாள்கின்ற விதம் நம்பிக்கையீனத்தை உருவாக்கியுள்ளது.
கொலைக் குற்றச் செயல் தொடர்பிலான விசாரணைகளை அரசியல் அதிகாரம் வழிநடத்த வேண்டுமா என ஒருவர் கேள்வி எழுப்பக்கூடும்? இந்தக் கொலைகளுக்கு நீதி வழங்குவதாக பிரச்சாரம் செய்தே ஆட்சியாளர்கள் வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்கள் எனவே விசாரணைகளை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடு என மற்றுமொருவர் வாதிடக்கூடும்.
கடந்த கால ஆட்சியின் கொடூரத்தன்மையை விளக்குவதற்கு இந்தக் கொலைகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. எனினும் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பது தொடர்பிலான நிலைப்பாடு என்ன?
இவ்வாறான அநேகமான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளன. குற்றவாளிகளை கைது செய்து கொலைக் குற்றச் செயலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
காலத்திற்கு இடமளித்து இதற்காக காத்திருப்பது நேர்எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.