பிரித்தானியாவுக்கு வந்திருக்கும் பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பின் தற்போதைய தலைவரான சிங்களப் பேரினவாதி சிறீலங்கா அதிபர் மைத்திரி பால சிறீசேனவை எதிர்த்துப் ஆயிரக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள் மாபெரும் போராட்டத்தை நடாத்தினார்கள்.
இன்று மார்ச் 9ஆம் நாள் மாலை 5 மணிக்கு லண்டன் Pall Mall இலுள்ள Marlborough House முன்பாக அணிதிரண்ட தமிழ் மக்கள் தமிழீழத்தேசியக்கொடியை ஏந்தியவாறு ‘ பிரித்தானியாவே சிறீலங்காவை புறக்கணி’, ‘பொதுநலவாயஅமைப்பிலிருந்து சிறீலங்காவை விலக்கு’, ‘சிறீலங்கா அரசுத்தலைவர் இனப்படுகொலைக் குற்றங்களுக்காக தேடப்படும் குற்றவாளி ‘ என்ற கருத்துகளை வெளிப்படுத்தும்விதத்தில் அமைந்த “Britain Britain say no to Sri Lanka”, ”commonwealth suspend Sri Lanka”, “Sri Lankan president wanted for genocidal crimes” என்ற கொட்டொலிகளை ஆவேசத்துடன் எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர். பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த 53 நாடுகளின் சார்பாளர்களும் ஒன்று கூடும் விழாவிலே அவ்வமைப்பின் தலைமைப்பதவி வகிக்கும் தமிழினக் கருவறுப்பாளன் மைத்திரிபால சிறீசேன கலந்து கொள்ள வந்தபோது அதனை எதிர்த்தே , பிரித்தானியாவின் பல பகுதிகளிலுமிருந்து வந்த பெருந்திரளான தமிழர்கள் உணர்வோடு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தமிழினப் படுகொலையாளன் மகிந்தவை அகற்றவே தமிழ் மக்கள் தமது வாக்கு ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள் என்பதையும் தமிழினக் கருவறுப்பைத் தொடர்ந்து நடாத்தி வரும் சிங்களப் பேரினவாத அரசின் அதிபரான மைத்திரி பால சிறீசேனவை அவர்கள் ஆதரிக்கவில்லை என்பதையும் உலகுக்கு உணர்த்தும் வகையில் பெருந்திரளான தமிழ்மக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழீழ மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தமிழ்த் தேசியம் பற்றியும் மாவீரர்களின் ஈகம் பற்றியும் பேசி, மக்களை ஏமாற்றிப் பதவியேற்ற பின் சிங்கள இனவாத அரசின் செயற்திட்டங்களுக்குத் தற்போது ஊதுகுழல்களாகத் திகழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சம்பந்தன் ஆகியோர் மீதும் ,சிங்கள இனவாதத்திற்குத் துணை போகும் சில தமிழ் ஊடகங்கள் மீதும் கடுஞ்சினம் கொண்டவர்களாகப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.
புலம்பெயர் தமிழ் மக்கள் லண்டன் வந்திருக்கும் மைத்திரிக்கு எதிராகப் போராட்டம் நடாத்தி சிங்கள அரச செயற்பாடுகளையும் தென்னிலங்கை சிங்கள மக்களையும் குழப்பவேண்டாம் என சுமந்திரன் புலம்பெயர் தமிழர்களிடம் கேட்டமை தொடர்பாகப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தங்கள் கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்தனர்.
இன்றைய நாளில் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலையாளன் மைத்திரிக்கெதிரான போராட்டத்தைக் குழப்பும் வகையில் சிறீலங்காவில் சில தமிழ் ஊடகங்களில் கூட பொய்ப்பரப்புரைகள் முன்வைக்கப் பட்டபோதும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த 53 நாடுகளின் சார்பாளர்களின் வாகனங்களுடன் சிறீலங்காவின் தமிழினப்படுகொலையாளன் மைத்திரிபாலசிறிசேனவின் வாகனமும் சென்றபோது மக்கள் மிக ஆவேசமாக கொட்டொலிகளை எழுப்பினர்.
இன்று வேலைநாளாக இருந்தபோதிலும், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பெருமளவில் தமிழ்மக்கள் கலந்துகொண்டனர்.இன்றைய போராட்டத்தில் இளையோர் பெருமளவில் பங்கெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை மணி7.30 அளவில் இன்றைய போராட்டம் முடிவடைந்தது.
ஆட்சிமாற்றம் என்ற போர்வைக்குள் அரச பயங்கரவாதத்தையே மைத்திரியும் கட்டவிழ்த்துள்ளார் என்பதையும் வல்லாதிக்க அரசியல் சதுரங்கத்திற்குப் பலியாகாமல் தாயகமாம் தமிழீழத்தை மீட்டெடுக்கும் வரை தமிழர்கள் உறுதியோடு தொடர்ந்து போராடுவார்கள் என்பதையும் சிங்களப் பேரினவாத அரசின் தற்போதைய அதிபர் மைத்திரிக்கெதிராக நடாத்தப்பட்ட இன்றைய போராட்டம் பறை சாற்றியது.