முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவிவரும் ஒருவகைக் காய்ச்சல் காரணமாக நேற்று (05) இன்னும் ஒருவர் உயிரிழந்துள்ளார் . இன்புளுவென்ஸா பி வகை வைரஸால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் . இந்தவகை க் காய்ச்சலால் கடந்த இரண்டு மாதங்களில் முல்லைத்தீவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
இந்தக் தொற்றுக் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவித்திருக்கும் நிலையில் இந்த இறப்பு நிகழ்ந்திருகிறது .
குமுழமுனையைச் சேர்ந்த எம்.பாக்கியம் (வயது –74) என்பவரே காய்ச்சலால் நேற்று உயிரிழந்தவர். இவர் கடந்த மூன்று வாரங்களாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் பயன் இன்றி இறந்துவிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொற்று காய்ச்சல் காரணமாக கடந்த நவம்பர் மாதம் மட்டும் 9 பேர் உயிரிழந்தனர்.
கடந்த மாதம் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் அனுமதிக்கப் பட்டபோதே இன்புளுவன்சா ஏ வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தது தெரிய வந்தது ..
முள்ளியவளை,தண்ணீரூற்று பகுதியினைச் சேர்ந்தவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளார்கள் என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.