நைஜீரிய போகோ ஹராம் போராளி குழுவானது ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக சூளுரைத்துள்ளது.
போகோ ஹராமின் டுவிட்டர் இணையத்தள பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒலிநாடா செய்தியிலேயே அந்த போராளி குழுவின் தலைவர் அபூபக்கர் ஷிகாயுவிற்குரியது என நம்பப்படும் குரல் சூளுரைத்துள்ளது.
போகோ ஹராம் போராளி குழு நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்த 2009 ஆம் ஆண்டிலிருந்து போராடி வருகிறது.
ஐ.எஸ். தீவிரவாத குழுவுடன் இணைந்து கொண்ட பிந்திய போராளி குழுவாக போகோ ஹராம் விளங்குகிறது.
இதுவரை காலமும் போகோ ஹராம் போராளி குழுவானது அல்-கொய்தா போராளிகளுடன் இணைப்பைக் கொண்ட அமைப்பாக கருதப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த அமைப்பு நைஜீரியாவில் நடத்தி வரும் குண்டுத் தாக்குதல்களில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு நைஜீரிய நகரான மெய்டுகுரியில் போகோ ஹராம் போராளி குழுவால் சனிக்கிழமை நடத்தப்பட்ட பிந்திய 5 குண் டுத் தாக்குதல்களில் குறைந்தது 50 பேர் பலி யாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி குண்டுத் தாக்குதல்களானது இரு சனசந்தடி மிக்க சந்தைகள் மற்றும் பஸ் நிலையம் என்பனவற்றை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது.
ஐ.எஸ். குழு கடந்த வருடம் கிழக்கு சிரியாவிலும் வடக்கு மற்றும் மேற்கு ஈராக்கிலும் இஸ்லாமிய தேசத்தை பிரகடனப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் போகோ ஹராம், எங்குமுள்ள முஸ்லிம்களை இஸ்லாமிய தேசத் துடன் இணைந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ளது.