இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை இந்த ஆண்டுடன் காலாவதியாகுவதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் இந்த வரிச்சலுகை காலாவதியாகுவதாகவும் அடுத்த ஆண்டுக்கான மீள் அங்கீகாரத்தை அமெரிக்க பாராளுமன்றம் வழங்கவில்லை என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (ஜீ.எஸ்.பி) வரிச்சலுகை இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்படுவதற்கான மீள் அங்கீகாரத்தை அமெரிக்க பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னர் அங்கீகரிக்காததன் காாரணமாக ஜீ.எஸ்.பி சலுகை பெறும் நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும்
எற்றுமதிகளுக்கு 2018 ஜனவரி முதலாம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு முக்கிய ஏற்றுமதிச் சந்தையை வழங்குவதால் பெருமையடைவதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்கத் தூதரகம், கடந்த 2016 ஆம் ஆண்டில்
வெளியான உலக வர்த்தக தரவுகளின்படி இலங்கையிலிருந்து 2.8 பில்லியன் டொலர் பெறுமதியான பொருள்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தமைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தமை தெரிந்ததே.