சத்திர சிகிச்சை நிபுணராக வந்து வவுனியா வைத்தியசாலையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் சுந்தர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அம் மாணவன் மேலும் தெரிவிக்கையில்,
நான் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையவில்லை. 97 புள்ளிகள் மட்டுமே எடுத்தன். கல்விப் பொதுசாதாரண தரப் பரீட்சையிலும் 9 ஏ எடுக்கவில்லை. 7ஏ, பி தான் எடுத்தேன். ஆனாலும் அதை வைத்து தான் நான் இந்தளவுக்கு படித்தேன். நான் படிப்பதற்கு எனது ஆசிரியர்கள் எனக்கு நன்றாக உதவி செய்தார்கள். வீட்டிலும் நல்ல உதவி கிடைத்தது. முயற்சி இருந்தால் எதையும் அடையலாம். முயற்சியால் தான் இந்த நிலையை அடைந்தேன். நான் இன்னும் படிக்கனும் நல்லதொரு சத்திர சிகிச்சை நிபுணராக வந்து எமது வவுனியா வைத்தியசாலையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த மாணவனின் வீட்டிக்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அம் மாணவனை வாழ்த்தியதுடன் அம் மாணவனின் பல்கலைக்கழக படிப்புச் செலவையும் தான் பொறுப்பெடுத்துக் கொண்டார். அத்துடன் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் அவர்களும் மாணவனின் வீட்டிற்குச் சென்று மாணவனை கௌரவித்ததுடன் கல்வி நடவடிக்கைக்கு ஏதாவது உதவிகள் தேவைப்படின் செய்து தருவதாகவும் உறுதியளித்திருந்தார்.