சுயதேடலே எனது வெற்றியின் இரகசியம்: பௌதீக விஞ்ஞான துறையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவன் துவாரகன்!

0
342

படிப்பிற்கென ஒவ்வொரு இடமும் ஏறி இறங்கி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் நேரத்தை வீட்டில் ஒதுக்கி படித்தால் நல்ல நிலைக்கு வரமுடியும் என்று தனது வெற்றியின் காரணத்தை பகிர்ந்து கொள்கிறார் நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் பௌதீக விஞ்ஞான துறையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ள வடமராட்சி ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் துவாரகன்.

வடமராட்சி புலோலியில் அப்பா சிறிதரன், அம்மா அமுதா, தங்கை அபிநயா, பேரன் செல்லையா, பேத்தி சிவக்கொழுந்து என்ற சிறிய குடும்பம் தான் துவாரகனின் குடும்பம். வீட்டிலிருந்து ஈருருளியில் பாடசாலைக்குச் சென்றுவந்த துவாரகன் தான் படித்த காலத்தில் பாடசாலைக்கும் தனியார் கல்வி நிலையத்திற்கும் செல்வதையன்றி வேறு எந்த இடங்களுக்கும் அநாவசியமாக வீட்டிலிருந்து வெளிக்கிடுவதில்லை என்கிறார். வீட்டிலிருந்து மிகுதியாயுள்ள நேரங்களை படிப்பிற்கென ஒதுக்கியது தனது வெற்றிக்கான பலமிக்க அத்திவாரமாக இருந்ததாக அவர் கூறுகின்றார்.

அதிகமான புத்தகங்களைப் பெற்றோர் மூலமாகப் பெற்று கல்விக்கென உபயோகப்படுத்துவதும், கிடைக்கும் நேரங்கள் எல்லாம் சிக்கலான கணக்குகளையும் சமன்பாடுகளையும் செய்து பயிற்சி எடுப்பதும் மட்டுமல்லாது தேவையான பாடப்பரப்புகளை இணையம் மூலமாகத் தேடிக் கற்பதும் துவாரகனின் கல்வி முயற்சிகளாக விளங்கியிருக்கின்றன. தந்தையார் ஒரு கணினி வள முகாமையாளராக இருப்பதனால் துவாரகனின் கல்வி குறித்த இணையத் தேடுதல்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றது. தனது மகன் ஆரம்பத்திலிருந்து ஆங்கில மொழி மூலத்தில் கற்றதனால் அவர் இணையத்தில் தேடிக் கற்பதற்கு இலகுவாக இருந்ததாக துவாரகனின் தந்தை இராமநாதன் ஸ்ரீதரன் கூறுகிறார்.

அத்துடன் படிக்கின்ற காலத்தில் தாம் தமது பிள்ளையினைக் கட்டாயப்படுத்திப் படிப்பித்ததில்லை என்றும் அவராகவே உணர்ந்து படித்ததாகவும் அவர் கூறுகின்றார். கடந்த பல ஆண்டுகளாக மாலை ஏழு மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியை யாருமே இயக்குவதில்லை என்றும் அவர் கூறுகின்றார்.

துவாரகனின் இந்த சாதனை குறித்து கருத்துத் தெரிவித்த அவரது வகுப்பு ஆசிரியரும் இரசாயனவியல் பாடத்தினைக் கற்பித்த ஆசிரியரும் தற்போதைய உப அதிபருமான குணசிங்கம் பிரதீபன் குறிப்பிடுகையில், “மிக நீண்ட காலத்தின்பின்னர் எமது கல்லூரிக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை இது. துவாரகன் சாதாரண தரத்தில் 8A 1C பெற்றவர். பின்னர் அவர் தனது ஆய்வு ரீதியான கண்ணோட்டத்தில் கற்றதால் இந்த வெற்றி கிடைத்தது. அவரது இந்த சாதனையைட்டு எமது பாடசாலை மிகுந்த பெருமையடைகிறது” என்றார்.

தான் எதிர்காலத்தில் ஒரு சிறந்த பொறியியலாளராக வருவதே உயர்ந்த கனவு எனக் குறிப்பிடும் துவாரகன், கிடைக்கின்ற நேரத்தை வீணாகக் கழிக்காமல் படிப்பிற்காகவே ஒதுக்கி கற்குமாறு உயர்தர மாணவர்களுக்கு ஆலோசனையை கூறுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here