வவுனியாவில் வர்த்தகர் ஒருவரைக் கடத்தி கப்பம் கோரியதாக கூறப்படும் மூவரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். யுக்ரேனுக்கு அடிக்கடி சென்றுவரும் வவுனியாஇ வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த அருந்ததிராசா என்பவரை கடத்தி 15 இலட்சம் ரூபா கப்பம் கோரியதாக கூறப்படும் மூவரையே இவ்வாறு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உக்ரேனில் இருந்து நாட்டுக்கு வந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி வவுனியா நகரத்துக்கு சென்ற குறித்த வர்த்தகர் காணாமல் போயுள்ளதாக அவரது சகோதரரினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் போன குறித்த வர்த்தகர் வவுனியா பொலிஸ் நிலையம் திரும்பியுள்ள நிலையில், தான் வவுனியா நகருக்கு சென்ற போது முச்சக்கர வண்டியில் வந்த சிலர் தன்னை கடத்திச் சென்றதாகவும் குடும்பத்தார் பணம் வழங்காமல் இழுத்தடித்தமையால் தன்னை விடுவித்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னை அவர்கள் பளை8 பிரதேச வீடொன்றில் தடுத்து வைத்திருந்ததாகவும், 15 இலட்சம் ரூபாவை விடுவித்த பின்னர் சென்று வழக்குவதாக காகிதம் ஒன்றில் எழுதி கையெழுத்து வழங்கிய பின்னரேயே விடுவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார் பளை, வவுனியா பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 45 வயதுக்கு உட்பட்ட மூவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, வர்த்தகரை கடத்தியதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதுடன், அவர் வழங்க வேண்டிய கடன் தொகையை வசூலிக்க அவரைக் கடத்தி கப்பம் கோரியதாக தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் சந்தேக நபர்கள் நேற்று வவுனிய நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.