கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைவதனை எதிர்த்து பிரதேச மக்கள், மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
இன்று (27) கரைச்சி பிரதேச செயலகத்திற்கு சென்ற பிரதேச மக்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் கரைச்சி பிரதேச செயலாளர் த. முகுந்தனிடம் தங்களது எதிர்ப்பு தெரிவிக்கும் மகஜரை கையளித்துள்ளனர்.
பத்துக்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் கையொப்பம் இட்டு குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
குறித்த புதிய மதுபானசாலை அமையவுள்ள இடத்திற்கு அருகில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி புனதிதிரேசா பெண்கள் கல்லூரி, விஞ்ஞானக் கல்வி நிலையம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் என்பன காணப்படுகின்றன. பெரிய பரந்தன் கிராமத்தில் 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணப்படுகின்றன அவற்றில் பெரும்பாலான குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள். எனவே எமது பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைவது எங்களை பொறுத்தவரை பெரும் பொருளாதார மற்றும் கலாச்சார பாதிப்புக்களையும் ஏற்படுத்தும்.
முக்கியமாக நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் பனை, தென்னை வளர்ப்பு தொழிலாளர்களாக உள்ளனர். இதனால் புதிய மதுபானசாலை அமையும் போது இவா்களின் குடும்பத்தின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.
அந்த வகையில் தாங்கள் புதிய மதுபானசாலை விடயத்தில் பிரதேச மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் கருத்தில் கொண்டு அவற்றுக்கான அனுமதியை வழங்காதிருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.