வட கிழக்கு பருவப்பெயர்ச்சியினால் வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்நிலையில், நேற்று (19) முதல் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மன்னார் – மாந்தை மேற்கு, தேவன்பிட்டி கிராமத்தில் நேற்று மாலை வீசிய கடும் காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன.
இதன்போது, 13 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வை.எம்.எஸ் தேசப்பிரிய குறிப்பிட்டார்.
இந்த வீடுகளின் சேத விபரங்கள் தொடர்பான மதிப்பீடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
பலத்த காற்று காரணமாக சேதமடைந்த வீடுகளைச் சேர்ந்த சுமார் 68 பேர் உறவினர்கள் மற்றும் அயல் வீடுகளில் தங்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் காற்று பலமாக வீசுவதாலும் கடல் கொந்தளிப்பாக இருப்பதாலும் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.
யாழ். மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருவதால், வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஜே 20 – சரவணை கிழக்கு பகுதியிலுள்ள பல வீடுகளுக்குள் வௌ்ளநீர் புகுந்துள்ளது.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் இன்று காலை முதல் தொடர்ச்சியாகப் பெய்த பலத்த மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
தோப்பூர் மற்றும் மூதூர் பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழை நீர் உட்புகுந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார்.
இன்று காலை தொழிலுக்குச்சென்ற திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கு மழை மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக மீண்டும் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் பெரும்பாலான பகுதிகளின் தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, மலையகப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், நீர்த்தேக்கத்தை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வாழ்வோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.