திருக்கேதீஸ்வரம் மாந்தைப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட புதைகுழி வழக்கு தொடர்பாக நேற்று (07) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரனைக்கு அழைக்கப்பட்டபோது விசாரனையின்றி வழக்கு தொடர்ந்து பிறிதொரு தினத்துக்கு தவணையிடப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதியிலிருந்து மாந்தை பகுதி குடி மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு அமைவாக வீதியோரமாக குழாய்கள் நிலத்தடியில் பதித்துச் சென்ற வேளையில் மனித எச்சங்கள் தென்பட்டிருந்தன.
இதைத்தொடர்ந்து மன்னாரில் அன்றைய நீதிபதியாக இருந்த செல்வி கனகரட்ணம் ஆனந்தியின் முன்னிலையில், சட்ட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி டீ.எல்.வைத்தியரத்தின தலைமையில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியை 05.03.2014 வரை 33 தினங்கள் அகழ்வு செய்யப்பட்டபோது 84 மனித எச்சங்களும் மண்டையோடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றை பகுப்பாய்வு செய்யும் நோக்குடன் அனுராதபுரம் வைத்தியசாலையில் தற்பொழுது பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை வெளிநாட்டிலுள்ள குறிப்பிடப்படும் நிறுவனத்தின் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரனிகள் கடந்த தவணைகளின்போது மன்றை கோரியிருந்தனர்.
இவ் வழக்கை விசாரனை செய்த முன்னைய நீதிபதியின் நாட்குறிப்பின்படியும் குற்ற புலனாய்வினர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் ஆகியோர் சமர்பித்த மேலதிக சமர்பணத்தை வைத்துக் கொண்டு தற்பொழுது வழக்கை விசாரித்து வரும் நீதிபதி கட்டளை பிறப்பிக்க இருந்தவேளையில் இவ் வழக்கை வேறொரு நீதிமன்றுக்கு மாற்றி விசாரனையை மேற்கொள்ளுமாறு குற்ற புலனாய்வு பிரிவினர் நீதி சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக கடந்த தவணையின்போது மன்றில் தெரிவித்திருந்தனர்.
இதனால் கட்டளை பிறப்பிக்கப்படாத நிலையில் நேற்று மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இம்மனுவேல் கயஸ் பல்டானோ முன்னிலையில் இவ் வழக்கு மீண்டும் அழைக்கப்பட்டபோது எதிர்வரும் 29.01.2018 வரை இவ் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.