கடத்தப்பட்டும் சரணடைந்தும் காணாமல் போனவர்களின் உண்மை நிலையை வெளியிட வலியுறுத்தியும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக்கோரியும் ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் பல தடைகளை தாண்டி இன்று யாழினை வந்தடையவுள்ளது. நாளை உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்படும் நல்லூரினை அது வந்தடையுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
தற்போது நடைபயணப்போராட்டத்தினில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து கொண்டுள்ள நிலையினில் பல்வேறு முட்டுக்கட்டைகள் தொடர்ந்தும் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது.தொடர்ச்சியான கெடுபிடிகளால் வாகன வசதிகளை வழங்கியவர்கள் பின்வாங்கியுள்ளனர்.அத்துடன் நடைபயணமாக வருகை தந்திருந்த வேளை இரவினில் தங்கியிருக்கும் ஆதரவாளர்கள் மீதும் கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்களினையடுத்து தற்போது பொது ஆலயங்கள் மற்றும் சனசமூக கட்டடங்களிலேயே தங்கியிருந்து போராட்டத்தை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் திட்டமிட்டபடி தமது போராட்டம் இலக்கை அடையும் வரை கைவிடப்போவதில்லையெனவும் அவர்கள் தெரிவித்தனர்.