அனைத்துலக பெண்கள் தினமானது வருடாவருடம் உலகெங்கும் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த இனத்தின் பெண்களின் மாற்றங்களை ஊக்குவிக்கும் நாளாகவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருட சர்வதேச பெண்கள் தினமானது மாற்றங்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் இவ்வருடம் அனுட்டிக்கப்படவுள்ள இந்நாளில் எங்கள் பெண்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் நிகழ்வாக நோர்வே தமிழ் மகளீர் அமைப்பு இந்நாளை முன்னெடுக்கவுள்ளது.
போரால் பாதிப்புற்ற தாயகப் பெண்களின் மறுவாழ்வு , அவர்களுக்கான குரல்களை உலகிற்கு எடுத்துச் சொல்லும் களமாகவும் இந்நாளில் புலம்பெயர் பெண்களை ஒன்றுகூடி குரல் கொடுப்பதோடு எங்கள் பெண்களின் மாற்றத்தை ஏற்படுத்த ஆதரவுகளையும் வழங்க முன்வருமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.
போருக்குப் பின்னர் தாயகத்தில் வாழ்வுரிமை மறுப்பு, தொடரும் பெண்கள் மீதான கைதுகள், பாலியல் பலாத்காரங்கள் உடனடியாக நிறுத்தப்படுவதர்க்கு அனைத்துலக பெண்களின் ஆதரவுக்குரல் எமக்கு பலமாக அமையும் என்ற காரணத்தை கருத்தில் கொண்டு இந்த நாளை எம் இன பெண்களின் துயரங்களை வெளிப்படுத்தும் நாளாக மாற்றுவதற்கு மாற்றுக்கருத்துக்களை ஓரம் கட்டிவிட்டு ஒருமித்த குரலோடு போராடுவோம்.
நாம் விடுதலைக்காக போராடும் இனம் ஏராளமான இடர்களை கடந்து இலட்சிய மனிதர்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றொம் எத்தனை தடைகள் முன் நின்றாலும் அத்தனையும் உடைத்தெறிந்து நேசிக்கும் தேசத்துக்காக இயந்திர வாழ்விலும் அயராது அற்பணிப்புக்களை செய்துகொண்டிருக்கின்றோம் இந்த நிலையில் அனைத்துலக பெண்கள் தினம் மிகவும் முக்கியமான நாளாக அமைகின்றது.குறிப்பாக நோர்வேயில் கடந்த வருடம் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட நோர்வேயிய பெண்கள் பங்கெடுத்த பேரணியில் நோர்வே தமிழ் மகளீர் அமைப்பு கலந்து கொண்டு எம்மின பெண்களின் அவலநிலையை வெளிப்படுத்தியது பல்லின பெண்களின் மனச்சாட்சியை தட்டியெழுப்பியது என்றால் அது மிகையாகாது
ஆகவே இம்முறையும் எமது மக்களின் அவல நிலையை அம்பலப்படுத்த அகவை பேதமின்றி அணிதிரள்வோம்.