தமிழினப் படுகொலையாளி சிறீலங்கா அதிபர் மைத்திரி பால சிறிசேன லண்டனுக்கு வருவதை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டப் போராட்டம் நடாத்தப்பட உள்ளது. மார்ச் திங்கள் 9 ஆம் நாள் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு மத்திய லண்டன் பகுதியில் இம்மாபெரும் ஆர்ப்பாட்டப் போராட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறீலங்கா சிங்கள பௌத்த பேரினவாத அரசின் அரக்கத்தனத்தினால் முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தையே கொன்றழித்துத் தமிழீழ மண்ணையே குருதி வெள்ளத்தில் மூழ்கடித்த கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சவுக்குப் பக்கபலமாகவும் இறுதியாகப் பாதுகாப்பு அமைச்சராகவும் கூட இருந்த மைத்திரிபால சிறிசேன, இப்போது மகிந்தவுக்கு எதிராளி என்னும் முகமூடி அணிந்து, சிறீலங்கா அரச அதிபராகி உலகை வலம் வருகிறார். அந்த வகையிலேயே பிரித்தானியாவுக்கும் வரவுள்ளார்.
இனப்படுகொலையாளி மகிந்தவை ஆட்சியிலிருந்து அகற்றவே மைத்திரிக்குத் தமிழ்மக்கள் வாக்களித்தார்களே தவிர, மைத்திரியை ஆதரித்து அல்ல என்பதையும் வாக்கு ஆயுதத்தைப் பயன்படுத்தி மகிந்தவை வீழ்த்திய தமிழ்மக்கள், சிறீலங்கா இனப்படுகொலையாளிகள் எவரையும் ஆதரிப்பவர்கள் அல்ல என்பதையும் தமிழினக் கருவறுப்புப் புரியும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தை எதிர்த்து எமக்கான நீதி கிடைக்கும் வரை நாம் ஓயாது போராடுவோம் என்பதையும் நாம் உலகுக்கு உணர்த்தியாக வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் என்பது சிறீலங்கா அரச பயங்கர வாதத்தின் வடிவ மாற்றமே. இந்த வடிவ மாற்ற அணுகுமுறைகளினூடாக தமிழின அழிப்புக்கு நீதி கோரி தமிழ் மக்களினால் முன்னெடுக்கப்படும் நீதிக்கான போராட்டத்தை வல்லரசுகளின் துணையோடு முடக்க சிறீலங்கா அரசு முனைகிறது. இதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. இவ்வாறான அரசியல் சதித்திட்டக் காய்நகர்த்தல்களை தமிழர்களாகிய நாம் புரிந்து கொண்டு ஒன்றாகி வென்றாக வேண்டும்.
எமது தமிழினத்தைக் கொன்றழித்தும் தொடர்ந்து தமிழினக் கருவறுப்புப் புரிந்து கொண்டும் இருக்கும் சிறீலங்கா சிங்கள பேரினவாதத்தின் அதிபர் பிரித்தானிய மண்ணுக்குக் காலடி வைப்பதை நாம் பெரும் பலத்துடன் எதிர்க்க வேண்டும். கொட்டும் பனியில் கொடுங்கோலன் ராஜபக்சவை விரட்டியது போன்றும் பிரித்தானிய மகராணியாரின் விழாவில் மகிந்த கலந்து கொள்ள வந்த போது சிறீலங்காக் கொடி கூட இல்லாமல் பயணிக்கச் செய்தமை போன்றும் , இப்போது லண்டன் வருகின்ற இனப்படுகொலையாளி மைத்திரியையும் ஒன்று திரண்டு எதிர்ப்போம். அணிதிரண்டு வாருங்கள்.
பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
தமிழ் இளையோரமைப்பு