தமிழ் இனத்தை அழித்த ராஜபக்சேவுக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய சுப்பிரமணியம் சாமியை யாருமே கண்டிக்கவில்லை. பாஜகவில் யாருமே அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லையே. அவரது பேச்சை தமிழிசை செளந்தரராஜன் ஏற்கிறாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக கேட்டுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ இதுதொடர்பாக மேலும் கூறுகையில், அந்த மனிதர் பெயரை (சு. சாமி) உச்சரிக்கக் கூட விரும்பாதவன் நான். ராஜபக்சேவால் திணிக்கப்பட்ட ஏஜண்ட்தான் சாமி.
அவர், ராஜபக்சேவின் ஏஜண்டாக ராணுவ ஆலோசனை மாநாட்டுக்கு அனுப்பபட்டதும் கொலைகார ராஜபக்சேவுக்கு பாரதரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்றதும், படகுகளை பிடிக்கும் படி நான் தான் சொன்னேன் என்பதும், மீனவர்களை நான் தான் விடுவிக்க சொன்னேன் என்பதும் உங்கள் மவுத் பீசாக ஊதுகுழலாக பேசுகிறார் சுப்ரமணிய சாமி. நான் கேட்கிறேன் பிரதமர் நீங்களா சுப்ரமணிய சாமியா.
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனக் கூறிய சாமியை ஏன் ஒருவரும் கண்டிக்கவில்லை. சுப்ரமணிய சாமி டுவிட்டரில் என்.டி.ஏ வை விட்டு மதிமுக வெளியேறவேண்டும் அல்லது தூக்கி எறியப்படுவீர்கள் கெட் அவுட் என்கிறார்.
நான் கேட்கிறேன் பாஜக தலைவர் இவரா அமீத் ஷாவா. டுவிட்டரில் என்னை மிரட்டியவர் வீட்டை மதிமுக தொண்டர்கள் முற்றுகையிட உள்ளதாகவும் அப்படி நடந்தால் சுப்ரீம் கோர்ட்டில் சொல்லி சகோதரி ஜெயலலிதா ஜாமீனை ரத்து செய்துவிடுவதாக கூறுகிறார்.