தலையில் பலத்த காயமடைந்து இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்த சிறுவன் தனது தந்தையுடன் சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் சென்ற போது சிகிச்சை வழங்க முடியாது எனக்கூறி வைத்தியசாலை தாதியர்கள் அவர்களை திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் தீவுப் பகுதியிலுள்ள வைத்தியசாலை யொன்றில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் அரசாங்க ஆதார வைத்தியசாலையிலேயே இடம்பெற் றுள்ளதுடன், இதில் தீவகத்தைச் சேர்ந்த சுரேஸ்குமார் பிரியங்கரன் (வயது 7) என்ற சிறுவனே பாதிக்கப் பட்டவராவார். குறித்த சிறுவன் காலை வீட்டில் நின்ற சமயம் எதிர் பாராத விதமாக தலையில் படுகாயமடைந்தார். அச்சிறுவனை அவரது தந்தை மேற்படி மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு சென்றதாகவும் அங்கு கடமையில் இருந்த தாதியர்கள் தற்போது சிகிச்சை பெற முடியாது பிற்பகல் 2.00 மணிக்கு வருமாறு அலட்சியமாகக் கூறியுள்ளனர். இதைக் கேட்ட குறித்த சிறுவனின் தந்தை ஆச்சரியமடைந்ததுடன், தனது மகனை உடனடியாகவே யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களின் ஒரு மனிதாபிமானமற்ற செயற்பாடு குறித்து சுகாதாரப் பிரிவினர் மற்றும் வைத்தியசாலை நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்குமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.