மலை நெஞ்சன் பிரபாகரன் கனல் மூச்சால்
மண் மீண்டும் அதிர்வு கொள்ளும்!
அலைகடல் எனத் தமிழீழம் கொதிக்கும்!
அடிமை கைத் தனை நொறுக்கும்!
கொலைவெறிச் சிங்களக் கோட்டை குலுங்கும்!
கொடுங்கோன்மை உடைந்து கொட்டும்!
தலைநிமிர்வோடு தமிழீழ நாடு
தன்பகை நொறுக்கி வெல்லும்!
இணையிலான் பிரபாகரன் எனும் ஆற்றல்
இன்றில்லை என்பவன் யார்?
அணையுமா தமிழீழ அகத்தில்
அவன் மூட்டிவைத்த செந்தீ?
கணை எமக்களித்தோன் போர்க்களமாட வைத்தோன்
காவலாய்த் துணை இருப்பான்
சுணையுள தமிழ்நீர் எழுவீர் பகைநஞ்சர்
சூழ்ச்சிகள் தகர்த்து வெல்வோம்!
ஆரடா பிரபா கரனெனும் அறத்தின்
அனல் மலை உடைக்க வல்லான்?
வீரன் அவன் போராணை இன்றும் நெஞ்சில்
வெடித்தெழ விம்முகின்றோம்!
போரணி மீண்டும் புனைதல் தமிழர்தம்
பொறுப்பெனச் செப்புகின்றான்
பாரனைத்தும் குலுங்கப் படை எடுப்போம்!
பகை உடைத் தெழுவோம் வாரீர்!
நிலமிசை பிரபாகரனெனும் நிமிர்வு
நித்தம் எந் தாய்மண் காக்கும்!
ஆலை அலையாய்த் தமிழ் வீரர் அணிபொங்கும்!
அடுத் தொரு புயல் அடிக்கும்!
விலகா அடிமை இருள்நாளை விலகும்!
விடிவெள்ளி வானில் பூக்கும்!
தலையாய விடுதலை மலரும் தமிழீழம்
தழைக்கும்! இது நடக்கும்!
மறமகன் பிரபா கரன் மண் வியக்கும்
மாபெரும் இயக்கம் ஆனான்!
அறம் விழும் காலம் அவன் எழும் காலம்
அதனால் நம்மிடையே வந்தான்!
விறல் மிகு வேங்கை! தமிழீழ மண்ணின்
வேலியாய் நின்ற வீரன்!
‘புறம்’ ஒன்றே விடியல் பெறும் பாதை என்றான்!
புயலாவோம்! விடியல் செய்வோம்!
உணர்சிக் கவிஞர் காசி ஆனந்தன்