மாவீரர்களே! நீங்கள் தியாகிகள். தமிழ் அன்னையின் அப்பளுக்கற்ற பிள்ளைகள்.
தமிழ் மக்கள் உரிமையோடு – சுதந்திரத் தோடு – நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஒரே இலட்சியத்தைத் தவிர உங்கள் உயிர்த் தியாகத்தில் வேறு எந்தக் கலப்பும் கிடையாது.
உங்களின் இனப்பற்று – மொழிப்பற்று தமிழுக்காக நீங்கள் செய்த உயிர்த் தியாகம் ஒப்பற்ற வரலாறு.
எனினும் எங்கள் ஊழ்வினைப் பயன் எங்களுக்குள் புல்லுருவிகள், மற்றவர்களின் மரணத்தில் காட்டிக்கொடுப்புக்காக விலை பேசும் கயமைத்தனங்கள்.
இந்த இருண்ட பகுதி எம் இனத்தைச் சூழ் ந்து கொண்டுள்ளது. அதனால் உங்கள் தியாகம் அர்த்தமற்றுப் போய்விட்டதோ என்று பலர் நினைக்கலாம்.
ஆனால் உண்மை அதுவன்று. இந்தப் பிரபஞ்சம், யுகம் கடந்தது சூரிய சந்திரர் இருக் கும்வரை இயங்கவல்லது.
ஆகையால் நேற்று, இன்று, நாளை என்பது மிகச் சொற்ப காலம் கொண்டது. இது இந்த மண்ணில் வாழ்கின்ற எங்களின் காலக் கணிப்பேயன்றி அது இறைவனுக்கோ இயற் கைக்கோ பொருத்துடையதல்ல.
எம் குறுங்கால வாழ்வில் எங்களுக்கு உரிமை கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும் எங்கள் பிள்ளைகள் செய்த தியாகத்துக்கு ஏதும் கைகூடவில்லையே என்ற கவலையும் தமிழ் மீது பற்றுக் கொண்டவர்களிடம் இருக் கவே செய்கிறது.
இவை வாழுங்காலத்தில் நம்மிடம் ஏற்படக் கூடிய தற்காலிக கவலையேயன்றி இது நிரந்தரமானதல்ல.
மாவீரர்களே! இன்று நீங்கள் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். உங்களை நினைவேந்துவதற்குத் தடை விதித்திருக்கலாம். நீங்கள் மகிழ்வோடு உறங்கும் சந்தனப் பேழைகளே… என்ற கீர்த்தனை ஒலியிழந்து கிடக்கலாம்.
ஆனால் இவையெல்லாம் என்றோ ஒரு காலம் இரட்டிப்பாகப் பிரவாகிக்கும். இதுவே உண்மையும் கடவுள் செயலுமாகும்.
ஆம், அந்நியர் ஆட்சியில் எங்கள் மண்ணில் ஆலயங்கள் இடிக்கப்பட்டன. உடைக்கப்பட்டன. ஏன் வாழை இலையில் உண்பதுகூட சமயச்சடங்காகக் கருதித் தண்டனை வழங்கப்பட்டது. அப்படியொரு காலம் இருந்ததல்லவா! அன்று வாழ்ந்த மக்கள் எத்துணை கவலை கொண்டனர்.
ஆனால் இன்று இலண்டனில், அமெரிக்காவில், ஏன் உலக நாடுகள் முழுவதிலும் சைவக் கோயில்கள் எழுந்து நிற்கின்றன.
அந்த வீதிகளில் தேர் ஓடுகிறது. ஏன் வெள்ளையர்கள் கூட அன்னதானத்தில் குந்தியிருந்து வாழையிலையில் சோறு உண்கின்றனர். இவை நடப்பதற்கு எத்தனை ஆண்டுகள் ஆயின.
அதுபோலவே உங்கள் தியாகம் ஒருபோதும் வீண்போகாது. என்றோ ஒருகாலத்தில் உங்களுக்கான நினைவாலயம் எழுந்து நிற்கும். அது அன்றைய உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும்.
அப்போது சிங்கள மக்களும் அதில் நின்று உங்கள் தியாகத்துக்கு வந்தனம் செய்வர். இது சத்தியம்.
வலம்புரி ஆசிரிய தலையங்கம்(22.11.2017)