இராணுவ ஆக்கிரமிப்பிலிருக்கும் எமது பண்ணைகளை விடுவித்து தாருங்கள்: ஐங்கரநேசன்

0
145

omanthai_check_point_sri_lankaஇராணுவத்தினர் வசம் இருக்கும் விவசாய அமைச்சுக்கு சொந்தமான பண்ணைகளையும் கூட்டுறவு சங்க கட்டடங்களையும் விடுவித்துத் தாருங்கள் என்று மத்திய உணவுப் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவிடம் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

உணவுப்பாதுகாப்பை கூட்டுறவு அமைப்புகளின் ஊடாக உறுதி செய்யும் நோக்கிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்று கடந்த 28 ஆம் திகதி யாழ். பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்இ கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், கூட்டத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய உணவுப் பாதுகாப்பு அமைச்சரிடம் மேற்குறிப்பிட்ட கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வடபகுதிக்கு இப்போது மத்திய அமைச்சர்கள் படையெடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
பழுத்த மரத்துக்கு வெளவால்கள் வரும் என்பார்கள். அது போன்றுதான் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் தமிழ் மக்களின் வாக்குகளைக் குறிவைத்தே மத்திய அமைச்சர்கள் தினந்தோறும் வடக்குக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே எமது மக்களின் கருத்தாக உள்ளது. அவ்வாறு இல்லாமல், உண்மையாகவே தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள கரிசனையால்தான், இங்கே வந்து செல்வதாக இருந்தால் அதை மெய்ப்பிக்கும் வகையில் சிலவற்றை செய்தாக வேண்டும்.

வடக்கில் கூட்டுறவுத்துறை கொடிகட்டி பறந்த ஒரு காலம் இருந்தது. எமது மக்கள் ஜனநாயக ரீதியாக நிர்வகிக்கக்கூடிய கூட்டுறவு அமைப்;புகளை உருவாக்கி தங்களது பொருளாதார தேவைகளை நிறைவேற்றி வந்துள்ளார்கள். கூட்டுறவுச் சங்கங்களினது இலாப வருவாய்க்கும் சமூகத்தின் தேவைகளுக்கும் இடையில் ஒருவித சமநிலை பேணப்பட்டு, கூட்டுறவும் சமூகமும் ஒன்றையொன்று சார்ந்து வளர்ச்சி பெற்றிருந்தன. எமது வெங்காயச் செய்கையாளர்கள் ஒரு கூட்டுறவு அமைப்பை உருவாக்கி அச்சுவேலியில் தங்களுக்கென சொந்தக் கட்டடம் ஒன்றையே நிறுவினார்கள்.

ஆனால் அந்தச் சங்கக் கட்டடத்தில் இன்று அடாத்தாக இராணுவமே நிலை கொண்டிருக்கிறது. எமது மக்களுக்குச் சொந்தமான வளமான விவசாய நிலங்களிலும் இராணுவமே பயிர் செய்து கொண்டிருக்கிறது. உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு காலத்துக்கு காலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதிக விளைச்சலை தரக்கூடிய பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இவற்றை எல்லாம் எங்களால் செய்ய முடியாத விதத்தில் எமது மாகாண அமைச்சுக்கு சொந்தமான வட்டக்கச்சி விதை உற்பத்தி பண்ணையிலும், இரணைமடு சேவைக்கால பயிற்சி நிலையத்திலும் வவுனியாவில் உள்ள தாய்த்தாவர பண்ணையிலும் இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து எல்லா இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here