2005 ஆம் ஆண்டின் பின்னர் யாழ்ப்பாணத்திலும் 2009ஆம் ஆண்டின் பின்னர் வடக்கு கிழக்கு முழுவதிலும் நேற்று முதல் மீண்டும் மாவீரர் வாரம் பகிரங்கமாக ஆரம்பமாகியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக ஆங்காங்கே இரகசியமாக நடந்து வந்த இத்தகைய நிகழ்வுகள், போர்க் காலத்தில் நடந்ததைப் போலவே துயிலும் இல்லங்களில் நிகழ்வுகளை நடத்துவது வரை முன்னேறியிருக்கின்றது.
போர்க் காலங்களில் மாவீரர் வாரமும் மாவீரர் தினமும் பெரும் எழுச்சியுடன் நடைபெறும். துயிலும் இல்லங்கள் இந்தக் காலப்பகுதியில் உணர்ச்சிப் பிழம்பாகக் கொழுந்துவிட்டெரியும்.
மிக நேர்த்தியான திட்டமிடலுடன் கன கச்சிதமாக நிகழ்த்தப்படும் நிகழ்வாகவும் மாவீரர் வாரமும் மாவீரர் தினமும் திகழ்ந்தன. ஒரு துன்பியல் நினைவு நிகழ்வாக இது இருந்தாலும் துயிலும் இல்லங்களுக்கு வெளியே தியாகத்தைக் கொண்டாடும் திருவிழாக்களாக அவை கட்டமைக்கப்பட்டிருந்தன.
வீதியோரங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வீதிகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இரவைப் பகலாக்கும் மின் குமிழ்கள் வண்ணங்களையும் பாய்ச்சி பகட்டைப் பறைசாற்றும். ஒலிபெருக்கிகள் இடைவிடாது தொடர்ந்து விடுதலை எழுச்சியை நரம்புகளில் ஏற்றியபடி இருக்கும் என்று வர்ணிக்கக்கூடிய அளவுக்கு அந்தக் காட்சிகள் இருக்கும்.
பண்டைய தமிழர்களின் நடுகல் வழிபாட்டை மீட்டெடுக்கும் பெருவிழா மாவீரர் தினம் என்று கொண்டாடப்பட்டதும்கூட நடந்தது. மரபை மீட்ட மறவர்களாகத் தியாகத்தின் திருவுரு வங்களாக நின்றவர்களும் அவர்களின் உறவுகளும் மதிப்புக்குரியவர்களாக இருந்தார்கள்.
இறுதிப் போர் தமிழர்களின் வாழ்வியலைச் சிதைத்ததைப் போன்றே, மாவீரர் வாரங்களையும், தினத்தையும், துயிலுமில்லங் களையும்,சிதைத்தழித்தது. அவை கடந்த காலங்களாகிப் போயின. அவற்றைப் பற்றிப் பேசுவதும், செயற்படுவதும் பயங்கரவாதம் என்றாகிப்போன பயங்கரத்துக்குள் தமிழர்கள் வந்து சேர்ந்தார்கள்.
அதிலிருந்து சில பல அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தி இன்று துயிலும் இல்லங்களுக்கு நேரில் சென்று மீண்டும் நினைவேந்தல்களை நடத்தக்கூடிய நிலமையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு அதற்கான வழி பிறந்தது. படையினர் விலகி நிற்க, துயிலும் இலங்கள் மீண்டும் ஒளிபெற்றன. இது சாத்தியமா என்ற அச்சத்தின் மத்தியில் அவசர அவசரமான ஏற்பாடுகளுடன் பெரும் திருப்பமாக மாவீரர் தினம் 2016 நவம்பர் 27ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிகழ்ந்தேறியது.
அவசர ஏற்பாடு மற்றும் அச்சம் காரணமாக அந்த நிகழ்வுகளின் மையப் புள்ளிகளாக அரசியல்வாதிகளே இருந்தார்கள். இது பின்னர் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது.
அதன் பின்னரான ஓராண்டு காலம் இருந்தபோதும் மாவீரர் வாரம் மற்றும் தினத்தைத் திட்டமிட்டுக் கன கச்சிதமாக நடத்தக்கூடிய பொதுக் கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படவேயில்லை. அதனால், இந்த ஆண்டிலும் முற்றிலும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வு நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே தென்படுகின்றன.
மாவீரர் பணிமனையைப் போன்ற ஒரு பொதுக் கட்டமைப்பு இந்த நிகழ்வுகளைப் பொறுப்பேற்காத வரையில் மாவீரர்களின் தியாகங்களுக்குள் அரசியல் புகுந்து விளையாடுவது தவிர்க்க முடியாததாகிவிடும். அதுவேதான் நடந்துகொண்டும் இருக்கிறது.
அந்தந்த மாவட்டங்களில் அல்லது பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களின் நிகழ்வுகளை நடத்துவதற்கென தனித் தனியான குழுக்கள் உருவாகியிருக்கின்றன. இவற்றின் பின்னணியில் உள்ளூர் அரசியல் தலைகள் உள்ளன என்பது பரகசியம்.
இது மேலும் மேலும் மாவீரர் நிகழ்வுகள் அரசியல் மயப்படுவதற்கும், அரசியல் போட்டிகளை ஏற்படுத்தும் இடமாகத் துயிலுமில்லங்களை மாற்றிவிடுவதற்கும் வழிசமைத்துவிடக்கூடும். எனவே மாவீரர் நிகழ்வுகளை நடத்துவதற்கான பொதுக் கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படவேண்டியது அவசியம். இந்தக் கட்டமைப்புக்குள் அரசியல்வாதிகள் இணைந்திருக்க முடியுமே தவிர, அவர்களின் தலைமையிலானதாக அவை இருக்க முடியாது.
தனிநாடு கேட்டு ஆயுத வழியில் போராடி மடிந்த மாவீரர்களின் நிகழ்வுகளை தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டோம், ஒன்றுபட்ட பிரிக்க முடியாத நாட்டுக்குள் தீர்வு என்பதே எமது நோக்கம் என்று பகிரங்கப்படுத்தக்கூடிய அரசியல்வாதிகள் அல்லது அத்தகைய கட்டமைப்புக்குள் வாழத் தயாராக இருக்கும் அரசியல்வாதிகள் தலைமையேற்று நடத்துவது என்பதும் அபத்தமாகவே இருக்கும்.
ஏற்கனவே இது தொடர்பில் ஒரு கோரிக்கை மாவீரர்களின் பெற்றோர் சார்பிலும் முன்வைக்கப்பட்டி ருந்தது. இவை எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்து இந்த மாவீரர் தின நிகழ்வை முழுமையாக ஒழுங்குபடுத்த முடியாவிட்டாலும், அடுத்த மாவீரர் தினத்தையாவது முழுமையாக நடத்த அனைவரும் முன்வர வேண்டும்.
தியாகங்கள் போற்றப்படவேண்டியவையே தவிர, அவை அரசியல் நலன்களுக்காகவும், சுய நலன்களுக்காகவும் பயன்படுத்தப்படக்கூடாதவை.
உதயன் ஆசிரிய தலையங்கம்(22.11.2017)