ரோஹிஞ்சாக்களை திருப்பியனுப்ப மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம்!

0
147

வன்முறைத் தாக்குதல்கள் காரணமாக மியான்மரிலிருந்து வெளியேறி வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களை மீண்டும் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் வகையில் மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
ஆனால், ஒப்பந்தம் குறித்த வேறெந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மியான்மர் தலைநகர் நேப்பிடாவில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகள் இந்த ஒப்பந்ததத்தில் கையெழுத்திட்டனர்.
இது ஒரு முதல்படி என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது. மிக விரைவாக ரோஹிஞ்சா அகதிகளை திரும்ப அழைத்து கொள்ள தயாராக இருப்பதாக மியான்மர் தெரிவித்துள்ளது.
ரோஹிஞ்சாக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்படாத வரை அவர்களை வலுக்கட்டாயமாக திரும்பப்போக சொல்வது குறித்து தொண்டு நிறுவனங்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர்.

பர்மா என்றும் அறியப்படும் மியான்மரில் நீண்ட காலமாக நாடற்ற சிறுபான்மை இனமாக கருதப்படும் ரோஹிஞ்சாக்கள் பல்வேறு துன்புறத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரகைன் மாநிலத்தில் வெடித்த வன்முறையை தொடர்ந்து 6 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிஞ்சாக்கள் அண்டை நாடான வங்கதேசத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், சிறுபான்மை இனமான ரோஹிஞ்சாக்களுக்கு எதிராக மியான்மர் ராணுவத்தின் செயல்பாடுகளை இன சுத்திகரிப்பு நடவடிக்கை என நேற்றைய தினம் (புதன்கிழமை) தெரிவித்தார்.
கடந்தவாரம், ரோஹிஞ்சா நெருக்கடி விவகாரத்தில் மியான்மர் ராணுவம் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

(BBC)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here