இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு வலய மையத்தில் மக்கள் உயிரிழந்தனர். அதன்போது மௌனமாக அரசாங்கம் இருந்தது. அவ்வாறான நிலையில் ஐக்கிநாடுகளிடம் நீதி கோரிநிற்பதாக தெரிவித்துள்ள மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் பிற்போடுகின்ற நீதி மறுக்கப்படுகின்ற நீதியாகும் எனவும் சுட்டிக்காட்டியதுடன் எவ்வாறு குற்றம் செய்தவனை நீதிவான் ஆக்குவது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையிடம் நீதி வேண்டி யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணியில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை என்பதால் ஐ.நா.வை நாடினோம். ஐ.நா.விடம் நீதியை கோருகின்றோம். அவர்கள் எங்களை கைவிட்டு விட்டதாகவும் ஏமாற்றிவிட்டதாகவும் உணர்கிறோம். ஆகவே இத்தகைய பேரணியூடாக ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளோம். ஐ.நா. ஆறு மாத காலம் பிற்போடப்படுவதாக அறிவித்துள்ளமையானது கவலையளிப்பதாகவுள்ளது.
நீதியான உள்ளக விசாரணை ஆறு மாதத்தில் செய்யப்படும் முயற்சியாக இருக்க மாட்டாது. அதனையும் பிற்போடுமாறு கோரி அவர்களையும் ஏமாற்றுவார்கள். பிற்போடுகின்ற நீதி மறுக்கப்படுகின்ற நீதியாகும். இந்த நாட்டில் இருப்பவர்கள் இந்த குற்றங்களைச் செய்தவர்களா என்பது குறித்து நியாயமான விசாரணை வேண்டும். அதற்காக எவ்வாறு குற்றம் செய்தவனை நீதிவான் ஆக்கமுடியும். ஆகவே, பாரபட்சமற்ற தூய்மையான உலகம் சார்பான ஒருஅமைப்பு நேரில்வந்து விசாரணை செய்ய வேண்டும்.
ஐ.நா.விசாரணை குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கவேண்டும். அவ்வாறு அவர்கள் வருமிடத்து அவர்களுக்கு நாங்களும் ஒத்துழைப்பு வழங்குவோம். இதுவே உண்மையை கண்டுபிடிக்க உதவி செய்வதாகும். இதனை விட்டு வேறு எதனை செய்தாலும் எம்மை ஏமாற்ற செய்வதாகும்.
இவ்வளவு காலமும் எம்மை தவிக்கவிட்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் கணக்கு மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் 1இலட்சத்து 46ஆயிரத்து 679பேர் எட்டு மாதத்தில் அழிக்கப்பட்டுள்ளார்கள்.
உண்மையை கூறப்போனால் வெ ளி நாட்டு சாட்சியங்களை செப்டெம்பர் மாதம்
அகற்றிவிட்டு அதன்பின்னர் பாதுகாப்பு வலயம் என்று கூறி அங்கு மக்களை ஒன்றுகூட்டி அழித்துள்ளார்கள். இவ்வாறு மூன்று தடவைகள் செய்துள்ளார்கள். இத்தகைய கொலைகள் திட்டமிட்டு செய்தவையாகும். போரை முடித்துவிட்டோம் என கூறுவதற்காக இதனை திட்டம் தீட்டி செய்தார்கள்.
இதனையே இன்றும் உள்ளவர்கள் செய்கிறார்கள். புதிய அரசிலும் பழைய அரசில் இருந்தவர்களே இருக்கிறார்கள். புதிய அரசு கூட நீதிக்காக எதுவும் கூறியதா? மனிதத்திற்காக எதுவும் செய்தார்களா மனித அழிப்புக்கு எதிராக எதும் செய்தார்களா தென்னிலங்கையில் எதுவும் செய்யவில்லை. காரணம் அரசாங்கம் செய்தது என்றும் இராணுவம் கடற்படை செய்தது என்று கூறுகிறார்கள்.
எமக்கு புதிய அரசில் நம்பிக்கை இருந்தது . ஆனால் இந்த அரசாங்கம்கூட தங்களால் செய்ய முடியாததை கூறுகிறது. உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். என்னிடம் தரப்பட்ட மகஜரை ஐ.நா.விடம் ஒப்படைப்பேன் என்றார்.